பசு இல்லாமல் பசும்பால் கிடைக்குமா?
06 Oct,2021
பசு இல்லாமல், பசும்பாலை உருவாக்க முடியுமா? அறிவியல், பாலின் உள்ளடக்கத்தை தலைகீழாக ஆராய்ந்து வைத்திருப்பதால், அது முடியும் என ஒரு பெரும் படை கிளம்பியுள்ளது. அதில் ஒன்றுதான், பிரிட்டனைச் சேர்ந்த பெட்டர் டெய்ரி.
பசுக்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்துவிட்டு, ஈஸ்டுகளை பால் சுரக்க வைக்கின்றனர் பெட்டர் டெய்ரியின் விஞ்ஞானிகள். விதவிதமான ஈஸ்டுகளை, தனித் தனி உயிரிக் கலன்களில் வைத்து, நொதிக்க வைக்கின்றனர். ஈஸ்டுகள் உற்பத்தி செய்யும் புரதங்கள் ஒவ்வொன்றும் பாலில் உள்ள புரதங்களே. அவற்றை எடுத்து சரியான விகிதத்தில் கலந்தால், அசல் பசுமாட்டுப் பால் போலவே சத்தும், மணமும் நிறமும் கொண்ட செயற்கைப் பால் கிடைக்கிறது.
தற்போது பெட்டர் டெய்ரி ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. அது பசுமாடு இல்லாத பாலை உற்பத்தி செய்வதற்கு முன்பாக, ஈஸ்டுகள் மூலம் வேய், கேசின் போன்ற பால் புரதங்களை தயாரிக்கத் துவங்கியுள்ளது. இவற்றை உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு பெருமளவில் தயாரித்து தரத் துவங்கிஉள்ளனர்.
பால் பொருட்களின் உலக சந்தை 700 பில்லியன் டாலர்கள். எனவே, பெட்டர் டெய்ரி, ஈஸ்ட் பாலை தொட்டி லாரியில் ஏற்றி அனுப்பும்போது, ஒரு பெரிய கியூ வரிசை காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.