மாடல் ஒருவருக்கு தவறாக முடி வெட்டிய சலூன் அந்த பெண்ணுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது ஒரு நுகர்வோர் நீதிமன்றம்.
நீண்ட கூந்தலைப் பெற்றிருந்த அந்தப் பெண், முடி தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மாடலாகப் பணியாற்றி வந்தார்.
ஆனால் அந்த சலூன் அவர் எப்படி சொன்னாரோ அப்படி இல்லாமல் முடியை சிறியதாக வெட்டிவிட்டது. இதனால் அந்த பெண்ணுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது என நுகர்வோர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தங்கும் விடுதியில் இடம் பெற்றுள்ள அந்த சலூன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ளலாம்.
இருப்பினும் அந்த சலூன் இதுவரை தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் கூறவில்லை.
தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், அந்த பெண் எதிர்பார்த்த பணி வாய்ப்புகளை இழந்துவிட்டார் என்றும் அதனால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதோடு அல்லாமல் அவரின் வாழ்கைமுறை முழுவதுமாக மாற்றிவிட்டது என்றும் டாப் மாடல் ஆக வேண்டும் என்ற அவரின் கனவு கலைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.
"அந்த பெண், சலூனின் கவனக்குறைவால் பெரும் மன உளைச்சலுக்கும் துயரத்திற்கும் ஆளானார். அவரது முடி வெட்டப்பட்டது குறித்தே யோசித்து கொண்டிருந்ததால் அவரால் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. இறுதியாக அவர் வேலையையும் அவர் இழந்துவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளது ஆணையம்.
இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு நடந்துள்ளது. விடுதிக்கு சென்று, சலூன் ஊழியர்களிடம் தனக்கு எவ்வாறு முடி வெட்ட வேண்டும், தனது தோற்றம் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என அந்த மாடல் விவரித்துள்ளார்.
ஆனால் அங்கு சிகை அலங்காரம் செய்பவர் முடியை மிக சிறியதாக வெட்டிவிட்டார். "தலையிலிருந்து வெறும் 4 இன்ச் அதாவது தோள்பட்டையை தொடும்வரை மட்டுமே முடி இருந்தது" என நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அந்த பெண் கண்ணாடியை பார்ப்பதை நிறுத்திவிட்டார். அவர் சில சந்திப்புகளிலும், கூட்டங்களிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவரது முடி சிறியதாக வெட்டப்பட்டதால் அவர் தனது தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்" என நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சலூனில் புகார் செய்ததும், அவருக்கு முடி வளர்வதற்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என்ற சலுகையை அவர்கள் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த சிகிச்சை போலியானது என்றும் அதனால் தனது முடி மேலும் சேதமடைந்தது என்றும் அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"அந்த பெண்ணின் சிகை சிறியதாக வெட்டப்பட்ட பிறகு மனதளவில் அவர் உடைந்துவிட்டார். அதனால் அவரது வருமானமும் குறைந்துவிட்டது. மேற்கொண்டு முடி வளர்வதற்கான சிகிச்சை மேலும் துன்புறுத்துவதாக இருந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பெரும் துயரத்தை அனுபவித்தார்." என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.