இந்திய அரசு அதிகாரிகளுக்கு 8546 கோடி ரூபாயை லஞ்சமாக அமேசான் நிறுவன சட்டப்பிரிவின் பிரதிநிதிகள் கொடுத்திருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோய்சி வரும் அமேசான் நிறுவனம், இந்தியாவில் ஏராளமான வழக்குகளில் சிக்கியுள்ளது. இதனிடையே அமேசான் நிறுவனம், தனது வர்த்தக செயல்பாட்டினை தொடர்ந்து சுமூகமாக நடத்த கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 8546 கோடி ரூபாயை செலவிட்டிருப்பதாகவும், இது லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே அமேசான் நிறுவனம் இந்த லஞ்ச விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியிருப்பதாகவும், இந்தியாவில் அமேசானின் மூத்த சட்டப்பிரிவு அதிகாரி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் குறித்து பேசிய அமேசான் செய்தித்தொடர்பாளர், ஊழலை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது, ஆனால் இந்த முறைகேடு குறித்து முழுமையாக விசாரிப்போம், இந்த நேரத்தில் மேற்கொண்டு எதையும் சொல்ல இயலாது என கூறினார்.
அமேசான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எதிர்கட்சியான காங்கிரஸ் இதனை கையில் எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரந்திப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்ததுடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ரந்திப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், பிரதமர் இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன்? அமேசானுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு விசாரணையை தொடங்குமாறு, அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவாரா என கேட்டார். மேலும் பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து விளக்க வேண்டும், மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.
எந்த இந்திய அரசு அதிகாரி அல்லது எந்த அரசியல்வாதி அமேசானிடம் இருந்து லஞ்சம் பெற்றார்? அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனத்தின் வணிகத்தை சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில்களின் வணிகத்தை மூடுவதன் மூலம் சட்டங்கள் மற்றும் விதிகளை மாற்றுவதற்காக மோடி அரசாங்கத்தில் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதா? எனவும் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.
சுர்ஜேவாலா எழுப்பியிருக்கும் 7 முக்கிய கேள்விகள்:
1. எந்த அரசு அதிகாரி மற்றும் அரசியல் தலைவர் ₹ 8,546 லஞ்சம் பெற்றார்?
2. அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் வணிகம் பெருக, சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில்களின் வணிகத்தை மூடுவதற்காக சட்டங்கள் மற்றும் விதிகளை மாற்றுவதற்காக மோடி அரசுக்கு இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதா?
3. இந்த லஞ்சம் கொடுத்த இந்த ஆறு அமேசான் நிறுவனங்களின் உள் உறவுகள் என்ன? இந்தத் தொகையை வழங்கிய இந்த நிறுவனங்களுடன் வணிக உறவுகளைக் கொண்ட நிறுவனங்கள் யார்?
4. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் லஞ்சம் கொடுப்பது அல்லது லாபி செய்வது சட்டவிரோதமானது. பிறகு எப்படி இந்த பெரிய தொகை கொடுக்கப்பட்டது?
5. ₹ 8,546 லஞ்சம் என்பது தேசிய பாதுகாப்பில் சமரசம் இல்லையா?
6. இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? இதை விசாரிக்க அவர் உத்தரவிடுவாரா?
7. இந்த விவகாரத்தை உச்சந்தீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டாமா?