இங்கிலாந்து தனது கொரோனா பயண விதிகளை மாற்றி, கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களை ‘தடுப்பூசி போடாத’ பிரிவில் சேர்த்துள்ளது.ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான விதிகளைதளர்த்தியிருந்தாலும், கோவிஷீல்டு தடுப்பூசியின் பட்டியல் பதிப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இந்த புதிய சுகாதார கொள்கையின் படி, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஸ்ட்ரா ஜெனெகா, பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.
இங்கிலாந்து வரும் இந்திய பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற இங்கிலாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
இங்கிலாந்து அரசு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் இருந்து வரும் இங்கிலாந்து வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை அறிவித்ததுது.இதன்படி 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் உள்பட அனைவருக்கும் 3 கட்ட கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பாக முதல் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இங்கிலாந்துக்குள் நுழைந்ததும் இந்திய பயணிகள் மேலும் 2 சோதனைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கும் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான் , நியூசிலாந்து, கத்தார், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியன நாடுகளில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 4ம் தேதி இந்த கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட உள்ளன. இங்கிலாந்து அரசின் இந்த திடீர் கட்டுப்பாட்டு விதிகளால் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் படிப்புகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக இங்கிலாந்து அங்கீகரிக்காமல் இருப்பது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்,இங்கிலாந்து வெளியுறவு மந்திரி எலிசபத் டிரஸ்-உடன் இது குறித்து பேசியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில், இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக் கொள்வது பற்றி இந்திய தரப்புடன் பேசி வருவதாக நேற்று இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.