சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணம், சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை கூறியுளளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை , திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கே.சி.வீரமணி அ.தி.மு.க ஆட்சியில் வணிகவரி மற்றும் பாத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர். வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருந்ததாக புகார் கூறப்பட்டதால் இந்த சோதனை நடந்தது.
நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? அமைச்சர் மா.சு அளித்த தகவல்நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? அமைச்சர் மா.சு அளித்த தகவல்
அதிரடி சோதனை
குறிப்பாக கே.சி.வீரமணி பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பிறகு பல்வேறு இடங்களில் முறைகேடாக சொத்துக்களை வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான ஓட்டல்களிலும், கே.சி. வீரமணிக்கு சொந்தமான வேளாண் கல்லூரியிலும் கே.சி.வீரமணியின் சகோதரர்கள் கே.சிஅழகிரி, கே.சி. காமராஜ் ஆகியோர் வீடுகளிலும், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடந்தது.
மொத்தம் 28 இடங்கள்
மொத்தமாக கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 2016 முதல் 2021 காலகட்டத்தில் கே.சி.வீரமணி அவர் பெயரிலும் அவரது தாயார் மணியம்மாள் (80) பெயரிலும் சொத்துகள் வாங்கியுள்ளதாக வழக்குப்பதிவில் கூறப்பட்டு இருந்தது. அதாவது வருமானத்துக்கு அதிமாக 654 சதவீதம் அதிகம் என்ற அடிப்படையில் அவர் சொத்து சேர்த்துள்ளதாக ஏற்க்கனவே வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை
இந்த நிலையில் கே.சி.வீரமணி வீடு, சொந்தமான இடங்களில் இருந்து ரூ.30 லட்சம் பணம், சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உடையவர்களின் இருப்பிடம் உள்பட பெங்களூரில் இரண்டு இடங்களிலும், சென்னை ஆறு இடங்களிலும் மொத்தம் 35 இடங்களிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தங்க நகைகள், சொகுசு கார்கள் பறிமுதல்
இந்த சோதனையில் ரூ.34,01,060 ரொக்க பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அன்னிய செலவாணி டாலர், ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம்(623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல்(தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டு இருந்தது.. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளது.