அடுத்த 100 நாட்களில் 50 புதிய விமான வழித்தடங்கள்: அமைச்சர் அறிவிப்பு
10 Sep,2021
உடான் திட்டத்தின் கீழ் அடுத்த நூறு நாட்களில் நாட்டில் புதிதாக 50 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.
கோவிட் சூழலால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக விமானப் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் கீழ் அத்துறையின் பொறுப்பு ஜோதிராதித்ய சிந்தியா வசம் வந்துள்ளது. அவர் முன் பல்வேறு சவால்கள் உள்ளன. அவற்றை எல்லாம் சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அதற்கான நூறு நாள் திட்டம் ஒன்றை இன்று (செப்., 9) செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், பணியாளர்கள், அதிகாரிகள் என பல தரப்பினருடன் இணைந்து ஆலோசித்து இத்திட்டம் தயாரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இத்திட்டத்தில் விமான நிலைய கட்டுமான, ஹெலிபோர்ட் கட்டுமானம், புதிய விமான வழித்தடங்கள், வாட் வரி சீரமைப்பு, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பில் தனியார் முதலீடு போன்ற 16 அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குஷிநகர், டேராடூனில் இரண்டாவது முனையம், அகர்தலா மற்றும் நொய்டா விமான நிலையம் ஆகிய பணிகள் நூறு நாள் திட்டத்தின் கீழ் தொடங்க உள்ளன. ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 6 இடங்களில் உடான் திட்டத்தின் கீழ் ஹெலிபோர்டுகளும், அதே திட்டத்தின் கீழ் புதிதாக 50 புதிய விமான வழித்தடங்களையும் உருவாக்க உள்ளனர். அக்டோபர் முதல் வாரத்தில் மட்டுமே 30 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
விமான நிறுவனங்கள் 35 முதல் 50 சதவகித வருமானத்தை எரிபொருளுக்காக செலவிடுகின்றன. அதனுடன் எரிபொருளுக்கான வரியும் சேர்ந்துகொள்ளும் போது விலை அதிகமாகிறது. அதனை குறைப்பதற்கான நடவடிக்கையிலும் அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சிந்தியா கூறினார்.