டெய்லரிடம் ரூ.10 லட்சம் மோசடிஸ ஜெயிலில் பெண் இன்ஸ்பெக்டர்!
29 Aug,2021
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் மதுரை எஸ்.பி பாஸ்கரனிடம் கொடுத்த புகாரில், “வில்லாபுரத்தில் பேக் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்த நான், தனியாக தொழில் செய்ய உறவினர்களிடம் கடன் வாங்கி பத்து லட்ச ரூபாயுடன், பாண்டி என்பவரிடம் மேலும் கடன் பெற நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்றேன். வீட்டில் போய் பணத்தை எடுத்துவருவதாக சொன்ன பாண்டி என்னை அங்கே இருக்க சொல்லிவிட்டுப் போனார். அந்த நேரம் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, நான் வைத்திருந்த பத்து லட்ச ரூபாயைப் பறித்துக்கொண்டார்.
“நாளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பணத்தைப் பெற்றுக்கொள்” என்று கூறிவிட்டுச் சென்றார். மறுநாள் போய்க் கேட்டதற்கு, உன் பையில் எந்தப் பணமும் இல்லை. இனி இங்கு வராதே, இனி பணத்தைப் பற்றி பேசினால் உன்மேல் கஞ்சா வழக்கு போட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார். என் பணத்தை மீட்டு இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். எஸ்.பி பாஸ்கரன், இந்தப் புகாரை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி சந்திரமெளலிக்கு உத்தரவிட்டார். விசாரணையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகச் சிலர் கூறியதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலைப் புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார்.
இதைத் தெரிந்துகொண்ட உக்கிரபாண்டியன், பால்பாண்டி, கார்த்திக், பாண்டியராஜாவுடன் இன்ஸ்பெக்டர் வசந்தியும் சேர்ந்துகொண்டு அவரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதற்குப் பிறகு சீட்டிங் கும்பலுடன் சேர்ந்து பறித்துக்கொண்ட புகாரில் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீது வழிப்பறி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வசந்தி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இன்னும் அவரைக் கைது செய்யாதது ஏன்? இந்த தாமதம் மனுதாரருக்கு சாதகமாக அமைந்துவிடாதா?
இதுபோன்ற செயல்களால் காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்” என்றார். இதையடுத்து, அரசு ஊழியர்கள் இதுபோன்ற முறை கேடுகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. காவல் ஆய்வாளர் வசந்தி, அவரது ஓட்டுநரை விரைவில் கைது செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த வசந்தியை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் வசந்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.