இந்திய ஏவுகணை - சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
25 Aug,2021
சீனா,அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு இராணுவப் பயன்பாட்டுக்கும் உட்படுத்தினால், இந்திய இராணுவக் களஞ்சியத்தில் இருக்கக்கூடிய சகல ஏவுகணைகளினதும் தாக்குதல் தூரத்திலேயே அது இருக்கிறது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு இந்திய கடற்படையின் ஒய்வுபெற்ற மூத்த அதிகாரியும் சீன ஆய்வுகளுக்கான சென்னை நிலையத்தின் பணிப்பாளருமான கொமடோர் ஆர்.எஸ்.வாசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அதன் கோடிப்புறத்தில் வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டா போட்டி இடம்பெறுவதையோ அல்லது வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தையோ ஒருபோதும் விரும்பப்போவதில்லை என்று கூறுகிறது. ஆனால், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு தனது போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் கொண்டுவருவதற்கு சீனா தீர்மானிக்குமேயானால், இலங்கையினால் எதுவும் செய்யமுடியாது.
இந்த துறைமுகத்தின் முற்று முழுதான கட்டுப்பாட்டை இலங்கை சீனாவுக்கு கொடுத்துவிட்டது. இராணுவ ரீதியில், இந்த சவாலுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலையில் இந்தியா இருக்கிறது.
ஏனென்றால், இந்து சமுத்திர கரையோர நாடுகள் மத்தியில் இந்தியா பூகோளரீதியான அனுகூலங்களை அனுபவிக்கிறது.சீனா எந்தவொரு இராணுவ சாகசத்தையும் செய்வதற்கு முன்னால் சீனா சிந்தித்துப் பார்க்கவேண்டிய அம்சம் இது.
அம்பாந்தோட்டையை ஒரு முன்னரங்க இராணுவத்தளமாக சீனாவினால் மாற்றமுடியுமாக இருந்தால், இலங்கை அதன் கோடிப்புறத்தில் வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டாபோட்டிக்கு இடமளித்தமைக்காக தன்னைத் தானே குறைகூறவேண்டியிருக்கும்.
அம்பாந்தோட்டையை சீனா ஒரு இராணுவத்தளமாக பயன்படுத்த தீர்மானிக்கும் பட்சத்தில் அதன் மூலமாக தோன்றக்கூடிய சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதுஎன அவர் மேலும் தெரிவித்துள்ளார்.