பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனிக்காத நிலையில், விரக்தியில் ரமணன் என்பவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.
`தண்டனைக் காலம் முடிந்தும் எங்களை முகாமில் அடைத்துவைத்திருக்கிறார்கள். எங்களை வெளியில் அனுப்புங்கள்” என்று பலகட்ட போராட்டம் நடத்தியும் பலனளிக்காததால், இலங்கைத் தமிழர்கள் வயிற்றைக் கிழித்தும், தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டுவருகிறது.
இங்கு குற்ற வழக்குகளில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் 80-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறப்பு முகாம் சிறைச்சாலையைப்போல் இல்லாமல், அனைத்து வசதிகளும் உள்ள விடுதியைப் போன்று இருக்கும். கூடவே 24 மணி நேரக் காவல் கண்காணிப்பும் இருக்கும்.
இங்குள்ள வெளிநாட்டுக் கைதிகள், `வழக்கு முடிந்தும் தங்களைச் சிறப்பு முகாமில் அடைத்துவைத்திருப்பதால், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அந்த வகையில், “தண்டனைக் காலம் முடிந்தும் எங்களை அகதிகள் முகாமில் அடைத்துவைத்திருக்கிறீர்கள்.
எங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இலங்கைத் தமிழர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை வலியுறுத்தித் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களையும் நடத்திவந்தனர். இதற்கு காவல்துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்,
“நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள். அடுத்த பதினைந்து நாள்களில் உங்களுக்கான நல்ல முடிவு வெளியாகும்” என்று தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் 12 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆட்சியர் சிவராசு நேரில் சென்று விசாரணை நடத்தினார்
இந்தநிலையில், தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று ரமணன், டிக்சன், வீரசிங்கம் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த வாரம் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனிக்காத நிலையில் விரக்தியில் ரமணன் என்பவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.
வீரசிங்கம் என்பவர் மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். மேலும் ஆறு பேர் அதிக அளவிலான தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
தையடுத்து தற்கொலைக்கு முயன்ற அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.