திவாலனவராக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,பறிபோகின்றது கிங் பிஷர் ஹவுஸ்!
15 Aug,2021
நீண்ட இழுபறிக்கு பிறகு வெறும் 52 கோடி ரூபாக்கு, திவாலனவராக அறிவிக்கப்பட்ட இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஹவுஸ் விற்பனையாகி இருக்கிறது.
கடன் தொல்லையால் நாட்டை விட்டு சென்று இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்குகொண்டு வர மத்திய அரசு முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் சிறை சரியில்லை. கழிவறை சரியில்லை என்று ஏதேதோ காரணங்களை கூறி இந்தியா வருவதை மல்லையா தவிர்த்து வருகிறார். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மும்பையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக கிங் பிஷர் ஹவுஸ் செயல்பட்டு வந்தது.
மும்பை விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் அந்த கட்டடத்தை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தி அதனை 2016-ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்ய முயன்றன.
ஆரம்பத்தில் இதனை 150 கோடி ரூபாயிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டபோதும் இதற்காக நடந்த ஏலத்தில் சொத்து விற்பனையாகவில்லை. அதன் பிறகு பல முறை இந்த சொத்தின் மதிப்பை குறைத்து காட்டி விற்பனை செய்ய முயன்றபோதும் அது முடியவில்லை. இந்நிலையில் தற்போது நீண்ட இழுபறிக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து வெறும் 52 கோடி ரூபாயிக்கு கிங் பிஷர் ஹவுஸ் விற்பனையாகி இருக்கிறது.
இந்த கட்டடம் மும்பை விலே பார்லே விமான நிலையம் அருகில் இருப்பதால் அதனை மேற்கொண்டு இடித்துவிட்டு அதிக உயரத்தில் கட்ட முடியாது. ஏனெனில் அதற்கு விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி கொடுக்காது. எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள் இதனை வாங்க தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் அதனை வாங்கி இருக்கிறது.
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு நிதி நெருக்கடியால் செயல்பட முடியாமல் போனது. இதனால் கிங் பிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட விஜய் மல்லையாவின் மது பான நிறுவனத்தில் விஜய் மல்லையாவுக்கு இருந்த குறிப்பிட்ட ஷேர்களை விற்பனை செய்து கணிசமான அளவு நிதியை கடன் கொடுத்த வங்கிகள் தன் வசப்படுத்தின.
கடந்த ஜூலை 26-ம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை அவர் வாங்கிய கடனுக்காக உலகம் முழுவதும் முடக்கலாம் என இந்திய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதனால் விஜய் மல்லையா உலகம் முழுவதும் வாங்கி போட்டியிருக்கும் சொத்துக்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான கடன் கொடுத்த வங்கிகள் முடக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது