சுதந்திர தினம்; மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார்
15 Aug,2021
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட பிறகு மேடை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திறங்கினார்.
அங்கு தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல் அமைச்சர் ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் அழைத்து சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏஎற்றுக்கொண்டர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்பட்டன. போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்தினார்.