இதில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதேநேரம், சில திட்டங்கள் பரவலாக மக்களிடம் பேசு பொருளாக மாறியுள்ளன. பெரும் வரவேற்பையும் உடனே பெற்றுள்ளன.
உயர்கல்வித்துறைக்கு சிறப்பு திட்டங்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு! பெட்ரோல் வரி குறைப்பு பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.3 குறைக்கப்படும் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் 35 பைசா என்று இருந்தது.
இப்போது 32 ரூபாய் 90 பைசாவாக உயர்த்தி விட்டார்கள். 2014ஆம் ஆண்டு மே மாதம் டீசல் மீதான வரி மூன்று ரூபாய் 57 பைசா என்ற அளவில் இருந்தது. அது இப்போது 31 ரூபாய் 80 பைசா என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் மேல் வரி, கூடுதல் கட்டணங்கள் அதிகரிக்கும் அதே வேளையில் மாநில பங்கு பெருமளவு குறைக்கப் பட்டது. 2019-20ம் நிதி ஆண்டை ஒப்பிடும்போது 2020-21 ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக மத்திய அரசுக்கு வருவாய் 63% அதிகரித்தாலும் மாநிலங்களுக்கான பங்கு சரிவடைந்தது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் மக்களுக்கு, நியாயமான தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.
இவ்வாறு நிதியமைச்சர் தனது உரையின் துவக்கத்தில் தெரிவித்தார். உரையின் இறுதியில், தமிழக அரசு பெட்ரோல் மீதான வரி விதிப்பை குறைக்கும் என்று அறிவித்தார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு கீழே குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பிற மாநிலத்தவர்களை தமிழகத்தை பார்த்து ஏக்கம் கொள்ள வைக்கும் ஒரு அறிவிப்பாகும். ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது. இப்போது அது மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி செல்வந்தர்களுக்கும் சென்று சேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்ததால், தகுதியான குடும்ப தலைவிகளை கண்டறியும் பணிகள் முடிந்த பிறகு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதேநேரம், குடும்ப தலைவிகள் தங்களது பெயரை குடும்ப தலைவர் பெயர் இருக்கும் இடத்திற்கு மாற்ற தேவையில்லை. இப்போது உள்ளபடியே பெயர் இருந்தாலும் தகுதியானவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என்பதில் இதில் மற்றொரு உபரி முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.
டைடல் பூங்காக்கள் விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்பது பெரும் வரவேற்பை பெற்ற மற்றொரு திட்டமாகும். சென்னையில் டைடல் பூங்கா ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக ஐடி துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. பெங்களூர், ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சிய நிலையில் டைடல் பூங்கா மூலமாக சென்னையில் ஐடி துறை புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது தெற்கு சென்னை பகுதி பெரும் வளர்ச்சி கண்டு இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த டைடல் பூங்காதான்.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலமாக தென் மாவட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. ஏர்போர்ட், துறைமுகம் போன்றவற்றைக் கொண்ட தூத்துக்குடி, பிற பகுதிகளில் இருந்து மக்கள் எளிதாக வந்து செல்ல சிறப்பான கட்டமைப்பு கொண்ட நகரம். இதுவும், தூத்துக்குடியை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு காரணம். இதேபோல இரண்டாம்நிலை நகரமாக உள்ள விழுப்புரம் டைடல் பூங்கா அமைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது. அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுமுறை
அரசு பெண் ஊழியர்களுக்கு 9 மாதங்களாக பேறு கால விடுப்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த விடுப்பானது 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 3 மாதமாக இருந்த பேறு கால விடுப்பை 6 மாதங்களாகவும் பிறகு 9 மாதங்களாக 2016 ஆம் ஆண்டு உயர்த்தியவர் ஜெயலலிதா. இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 9 மாத பேறு கால விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கியுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஓராண்டுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. எனவே இந்த உத்தரவால் அரசு பெண் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தடுப்பணைகள் 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற மற்றொரு அறிவிப்பும் வரவேற்பை பெற்றுள்ளது. கிடைக்கக்கூடிய தண்ணீர் வீணாக சென்று கடலில் சேருகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், இதுபோன்ற தடுப்பணைகள் கட்டுவதன் மூலமாக தண்ணீர் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயிகளுக்கு, விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. மக்களுக்கு தண்ணீர் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வசதி செய்து தர வழிவகை செய்யப்படும். 83.92 லட்சம் குடும்பங்களுக்கு தற்போது வீட்டுக் குடிநீர் இணைப்பு திட்டம் இல்லை.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் இவர்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்ய வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும் என்று பிடிஆர் அறிவித்துள்ளார் சென்னைக்கு முக்கிய அறிவிப்பு 2026ம் ஆண்டு டிசம்பருக்குள் சென்னை மெட்ரோ ரயில் 2ம் திட்டம் முடிக்கப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும். சென்னை பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ சேவையை
2025ல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா & திருவள்ளுரில் மின் வாகன பூங்கா ஏற்படுத்தப்படும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல் பெண்கள் நகர பேருந்துகளில் பயணிக்க இலவச டிக்கெட் திட்டத்திற்காக டீசல் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் மானியத்திற்காக
ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனி கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்பது மற்றொரு முக்கிய அறிவிப்பாகும். கல்வித்துறைக்கென இந்த ஆண்டு ரூபாய் ₹32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வில்லங்கச் சான்றிதழ் நிலங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ்கள் 1975ம் ஆண்டு வரை இணையம் மூலம் சரிபார்க்கலாம் என்ற வசதி உள்ளது. அது இனி, 1950ம் ஆண்டு வரை சரிபார்க்கலாம் என விரிவுபடுத்தப்படும். இவைதான் அதிகம் பேசு பொருளாகியுள்ள டாப் 10 அறிவிப்புகள்.