வங்கதேசத்தில் அட்டூழியம் 4 ஹிந்து கோவில்கள் சூறை
10 Aug,2021
வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். ''இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர்,'' என்றார்.