தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 31-ந்தேதியில் இருந்து இன்று காலை 6 மணி வரையில் 9 நாட்கள் சென்னையில் முக்கிய வணிக பகுதிகளில் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதன்படி கடந்த 9 நாட்களாக தி.நகர், புரசைவாக்கம், ஜாம்பஜார், பாரிமுனை, அமைந்தகரை, செங்குன்றம், கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி, ராயபுரம் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் சாலையோர கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இந்த தடைகளை நீக்கி சென்னை மாநகராட்சி நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. மேற்கண்ட 9 இடங்களிலும் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் இன்று கடைகள் திறக்கப்பட்ட காட்சி.
இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் தி.நகர் ரெங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரையிலான பகுதிகளில் சாலையோர கடைகள் வழக்கம்போல இயங்கின.
ரெங்கநாதன் தெருவில் உள்ள பெரிய ஜவுளி கடைகள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டன.
இதே போன்று புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரையிலும், ஜாம்பஜார் ரத்னாகபே சந்திப்பு முதல் பெல் சாலை சந்திப்பு வரையிலும், பாரிமுனையில் குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரையிலும், ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டாங்க் முதல் காமாட்சியம்மன் சாலை வரையிலும் இன்று வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டன.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லாஅபிமன்யு வரையிலும், செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கார் சிலை வரையிலும் இன்று காலை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
9 நாட்களுக்கு பிறகு மேற்கண்ட இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டது. வழக்கமான பரபரப்புடன் தி.நகர். ரெங்கநாதன் தெரு செயல்பட்டது. அங்கு முழுமையான இயல்பு நிலை திரும்பி இருந்தது.
இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி விடுத்துள்ள எச்சரிக்கையில் வியாபாரிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று செயல்படாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று 9 இடங்களிலும் தீவிரமாக கடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது முறையாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் அணியாத பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.