அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 42,625 பேர் பாதிப்பு!
05 Aug,2021
இந்தியாவில் நேற்று முன்தினம் 30 ஆயிரத்து 549 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 42,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பும் 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது.
நேற்றுமுன்தினம் 18 லட்சத்து 47 ஆயிரத்து 518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 2-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் (16 லட்சத்து 49 ஆயிரத்து 295 மாதிரிகள்), இது கிட்டத்தட்ட 2 லட்சம் அதிகம் ஆகும். தினசரி பாதிப்பு விகிதம் 2.31 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 2.36 சதவீதம்.
2-ந் தேதியும், 3-ந் தேதியும் தொடர்ந்து தினமும் 422 பேர் கொரோனாவால் பலியானார்கள். நேற்று இந்த எண்ணிக்கை 562 ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 757 ஆக உயர்ந்தது. வழக்கம்போல மராட்டியத்தில் அதிகபட்சமாக 177 பேரும், கேரளாவில் 148 பேரும் இறந்திருக்கிறார்கள்.
கொரோனா இறப்பு விகிதம் 1.34 சதவீதமாக தொடருகிறது.
கொரோனாவில் இருந்து மீள்வதற்கு எடுத்த சிகிச்சை பலன் அளித்ததால் நேற்று ஒரு நாளில் 36 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள்.
இதுவரை நாட்டில் 3 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 22 பேர் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறார்கள்.
மீட்பு விகிதம் 97.37 சதவீதம் ஆகும்.
6 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. நேற்று இது மாறியது. சிகிச்சை பெறுவோர் எணணிக்கையில் 5,395 அதிகரித்தது.
காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 4 லட்சத்து 10 ஆயிரத்து 353 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1.29 சதவீதம் ஆகும்.
இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.