தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 14 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தாக்கத்தின்போது வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அரசுப் போக்குவரத்துத் துறை பதிவேடுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே, 3 லட்சத்து, 31 ஆயிரத்து, 969 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கல்லூரி, பள்ளி வாகனங்கள், பல வகையான லாரிகள் என 13 லட்சத்து, 10 ஆயிரத்து, 317 போக்குவரத்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே, 56 லட்சத்து, 31 ஆயிரத்து, 565. மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் இது சுமார் 85 சதவீதமாகும். கொரோனா பாதிப்பு காலத்தில் ரயில், பேருந்துகளில் மக்கள் பயணிப்பதை தவிர்த்தாலும், கார், இருசக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சத்தால் மக்கள் பொதுப் போக்குவரத்து வசதியை தவிர்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை 3 முதல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, சாலைகளை விரிவுபடுத்துதல், முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மத்திய அரசு பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 20 ஆண்டுகளைக் கடந்த சொந்த வாகனங்களையும், 15 ஆண்டுகளைக் கடந்த போக்குவரத்து வாகனங்களையும் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது பழைய வாகனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம்தான், மாசு குறைபாட்டை சரிசெய்ய முடியும். உதிரி பாகங்களின் விலை குறையும். புதிய வாகனங்களின் உற்பத்தி பெருகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "புதிய தொழிற்சாலைகள் திறப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் வாகனப் பெருக்கம் தவிர்க்க முடியாதது. ஆனாலும், சில கட்டுபாடுகள் மூலம் தனியார் வாகனப் பெருக்கத்தை குறைக்கலாம். வெளிநாடுகளைப்போல, மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல பல்வேறு வகையான பொதுப் போக்குவரத்து வசதியை உருவாக்க வேண்டும். அதேபோல, விரைவாக செல்ல தனி பாதை ஒதுக்கீடு, பேருந்துகளுக்கு தனி சாலை போன்றவற்றை செயல்படுத்தலாம். மேலும், டில்லியில் கார் போன்ற சொந்த வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப்போல, சென்னை போன்ற மாநகரங்களிலும் கட்டுப்பாடுகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.