நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டின் ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், மருத்துவ காப்பீடு செய்தோருக்கு, சிகிச்சை செலவாக, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
இதில், கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, காப்பீடுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரிதேஷ் குமார் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையால், மருத்துவ காப்பீடுதாரர்களின் கோரிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன.
இது, கடந்த முழு நிதியாண்டில் வந்த அளவிற்கு நெருக்கமாக உள்ளது. மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், முதல் காலாண்டில், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டுதாரர்களுக்கு வழங்கியுள்ளன.இதில், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதற்காக வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 25 சதவீத காப்பீட்டு கோரிக்கைகள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘பாலிசி பஜார்’ மருத்துவ காப்பீட்டு பிரிவு தலைவர் அமித் சாப்ரா கூறியதாவது: கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மருத்துவ செலவின கோரிக்கைகளில், கொரோனா பிரிவு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்கு தான் இருந்தது. இது, மூன்றாவது காலாண்டில், 31 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில், 14 சதவீதமாகவும் சரிவடைந்தது.
இந்நிலையில் தான், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. இதனால், இந்தாண்டு ஏப்., – ஜூன் காலாண்டில், கொரோனா பிரிவு காப்பீட்டு கோரிக்கை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கால் விபத்துகள் குறைந்ததும், ஏராளமானோர் பிற நோய்களுக்கான சிகிச்சையை தள்ளிப் போட்ட காரணத்தால், மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகளில் பிற பிரிவுகளை விட கொரோனாவுக்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வேகமான வளர்ச்சி
கடந்த, 2019 – 20ம் நிதியாண்டில், மருத்துவ காப்பீட்டு துறையின் பிரிமியம் வருவாய், 51 ஆயிரத்து, 674 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2020 – 21ம் நிதியாண்டில், 58 ஆயிரத்து, 572 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது