இந்திய கப்பல் ஊழியர்களுக்கு சீன துறைமுகத்தில் தடையா?
28 Jul,2021
சீனாவுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வர்த்தக கப்பல்களில் இந்திய ஊழியர்கள் பணியில் இருந்தால் அந்த கப்பல்கள் துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
ஆஸ்திரேலிய நிலக்கரியை ஏற்றிக் கொண்டு இந்திய கப்பல் ஊழியர்களுடன் கடந்த ஆண்டு சீனா சென்ற இரண்டு சரக்கு கப்பல்கள் பல மாத காத்திருப்புக்கு பின் சீனாவுக்குள் அனுமதிக்கப்பட்டன. அனைத்திந்திய கப்பல் ஊழியர்கள் சங்கத்தினர் துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனவாலுக்கு கடிதம் எழுதினர்.
அதில் 'சீனாவுக்கு செல்லும் சரக்கு கப்பல்களில் இந்திய ஊழியர்கள் பணியில் இருந்தால் அந்த கப்பல்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல் ஊழியர்கள் பணியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
'இந்திய ஊழியர்களுடன் வரும் சரக்கு கப்பல்களை துறைமுகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்' என சீன அரசு அதிகாரப்பூர்வமற்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
''சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது'' என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியன் தெரிவித்தார்.