மனிதத் தலை.. வாயில் எலும்புத்துண்டு. நரமாமிசம்.. தென்காசி சாமி
27 Jul,2021
தென்காசி: தென்காசி அருகே அழுகிய மனிதத் தலையுடன் சாமியாடிய நபர் நரமாமிசம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணியில் போத்தி சுடலை மாடசுவாமி கோவில் உள்ளது. இதை காட்டுக் கோவில் என்றும் அழைப்பர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும். அதன்படி கொடை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
சென்னை
இந்த விழாவில் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். கொடை விழாவின் ஒரு பகுதியாக 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சாமியாடிகள் "வேட்டைக்கு" செல்வது ஐதிகம். கோயிலில் மேளச் சப்தத்தின் ஓசையில் சாமியாட்டம் நடந்தது.
வேட்டையாடுதல்
பின்னர் ஒரு சாமியாடி கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு காட்டுக்குள் சென்றார். அங்கு "வேட்டையாடிவிட்டு" திரும்புகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடுகாட்டில் புதைத்த ஒருவரின் தலையை கொண்டு வந்தார். அது அழுகிய நிலையில் இருந்தது.
சமூகவலைதளங்கள்
மற்றொருவர் வாயில் எலும்புத் துண்டை கடித்தபடியே வந்தார். இன்னொருவர் நர மாமிசத்தை சாப்பிட்டார். இதை பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.
சர்ச்சை
மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாடிகள் மூவரை விசாரணை நடத்தி அந்த தலையையும் எலும்புக்கூடுகளையும் எங்கே போட்டனர் என்று விசாரணை நடத்தினர்.
ஊரடங்கு விதிகள்
மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காதது, அதிகப்படியான நபர்களை கூட்டம் சேர்த்தல், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.