``ஒன்றியம் எனும் வார்த்தையை கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மமதா பானர்ஜியைப் போல பா.ஜ.க அரசை எதிர்ப்பதற்கு தி.மு.க முன்வர வேண்டும்," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்திய அரசுடன் மென்மைப்போக்கை தி.மு.க கடைப்பிடிக்கிறதா?
பா.ஜ.க வழியில் தி.மு.கவா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்தச் சந்திப்பை நான் பெருமைக்குரியதாகப் பார்க்கிறேன். பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். அவர் அதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசின் செயல்பாடு சரியாக இருக்கிறது. மிகவும் வேகமாக இயங்குகிறார்கள்," என தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க எதிர்ப்பை மையமாக வைத்து களமிறங்கிய சீமான், முதலமைச்சரை சந்தித்துப் பேசியது விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், தி.மு.க அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு, ஸ்டெர்லைட் விவகாரம், கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம், எழுவர் விடுதலை எனப் பல விஷயங்களை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ` தமிழகத்தில் வலிமையில்லாத நிலையில் அ.தி.மு.கவின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.கவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து, அதனையொட்டி பரப்புரைகளை முன்வைத்து அதிகாரத்திற்கு வந்த தி.மு.க, இன்றைக்கு பா.ஜ.க இட்ட பாதையில் செல்வதும் அவர்களை மென்மையான போக்கோடு அணுகுவதும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது' என்று சீமான் கூறியுள்ளார்.
மோகன் பாகவத்துக்கு முக்கியத்துவமா?
தொடர்ந்து அந்த அறிக்கையில், ` இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்ட 'ஒன்றியம்' எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி தி.மு.க அரசு, பா.ஜ.கவை எதிர்த்து வீரியமாக செய்த அரசியல் என்ன? 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக நாடெங்கிலும் எழுந்த எதிர்கட்சிகளின் அணிச் சேர்க்கையை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முந்திக்கொண்டு அறிவித்து முறியடித்த ஸ்டாலின், தற்போது அதன் நீட்சியாக பா.ஜ.கவை பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கொரோனாவுக்கு எதிரான தன்னார்வ இயக்கங்களின் கலந்தாய்வுக்கூட்டத்தில் பா.ஜ.கவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிளையான சேவா பாரதியை அழைத்தது ஏன்? அதன் பின்புலத்திலுள்ள அரசியல் என்ன? சேவா பாரதி நடத்திய நிகழ்வில் தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு தி.மு.கவுக்கு என்ன தொடர்பு? அதன் விளைவாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் வருகைக்கு தி.மு.க அரசு அவ்வளவு முதன்மைத்துவம் வழங்கியதா? சமூக வலைத்தளங்களில் உத்தரவுக் கடிதத்தின் நகல் வெளியாகி எதிர்ப்பையும் கண்டனத்தையும் எதிர்கொண்ட பிறகு, வேறு வழியின்றிதானே கடிதம் அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?
வெற்று நாடகமா?
அண்ணாவின் வழியில் நடத்துவதாகக் கூறும் தி.மு.க, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படக்கூடிய மாநிலத் தன்னாட்சியை நிலைநாட்டத் தயங்குவது ஏன்? எழுவர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது 161வது சட்டப்பிரிவின்படி மீண்டும் தீர்மானம் இயற்றியோ எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டிய தி.மு.க, அது எதனையும் செய்யாது, தனக்கு அதிகாரமில்லை எனும் ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான கூற்றை ஏற்பது போல, ஒப்புக்கு குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதி அனுப்பி விட்டால் போதுமா? அந்த குடியரசு தலைவரை நேரில் சந்தித்தபோது கருணாநிதியின் படத்தைச் சட்டப்பேரவையில் திறந்து வைக்க அழைப்பு விடுத்த ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து ஒரு வார்த்தைகூட பேசாததன் மூலம் குடியரசு தலைவருக்குக் கடிதம் அனுப்புவது வெற்று நாடகம் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார்தானே?' எனக் காட்டமாக விமர்சித்துள்ளார் சீமான்.
``ஆட்சி சிறப்பாக நடக்கிறது எனக் கூறிவிட்டு, தற்போது விமர்சிப்பது சரிதானா?" என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``மத்திய அரசிடம் இருந்து உரிமையைப் பெறும் வகையில் தி.மு.க அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதனால்தான் அதனை விமர்சித்து சீமான் அறிக்கை வெளியிட்டார். நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. தேர்தலின்போது, `நீட் தேர்வை ரத்து செய்வோம்' எனக் கூறினார்கள். பின்னர், `விலக்கு பெறுவோம்' என்றார்கள்.
கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று வந்தார். இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. தற்போது, `மாணவர்களுக்கு வேறு வழியில்லை, காலம் குறைவாக இருக்கிறது' என்கிறார்கள். அடுத்ததாக, ஏழு பேர் விடுதலையில் 2016 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட கருணாநிதி, `161 ஆவது விதியின்படி மாநில அரசுக்கே அதிகாரம் இருக்கும்போது, எதற்காக காதை சுற்றி மூக்கைத் தொட வேண்டும். நீங்களே நேரடியாக அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்,' என்றார்.
இந்த விவகாரத்தில் பேரறிவாளனின் வழக்கறிஞர்கள் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தனர். `ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும்' என நீதிமன்றம் கூறியபோது, ` குடியரசுத் தலைவருக்கே அதிகாரம்' என ராஜ்பவன் மாளிகை கூறியது. `அப்படியில்லை' எனக் கூறி பேரறிவாளன் தரப்பினர் சட்டரீதியாக போராடி வருகிறார்கள். அவர்களை விடுவிப்பதற்கான அதிகாரம் என்பது மாநில அரசிடம்தான் உள்ளது. இந்த அரசு வந்த பிறகு, மீண்டும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதன் மூலம் அத்துணை போராட்டங்களையும் வீணடித்துவிட்டார்கள். அண்மையில் குடியரசு தலைவரை சந்திக்கச் சென்றபோது இதுகுறித்துக் செய்தியாளர்கள் கேட்டபோது, `நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது' என்றார்கள்.
மதுரையில் ரோஸ் நிற பேட்ஜ் எதற்கு?
மேலும், கூடங்குளம் அணுஉலை விரிவாக்கத்தைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. நியூட்ரினோ விவகாரம் தொடர்பாகவும் அரசு மௌனமாக உள்ளது. ஸ்டெர்லைட் விவகாரம் தேர்தலில் எதிரொலித்தது. கடந்த ஆட்சியில் 13 பேரை கொன்றதை முன்வைத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. தற்போது அங்கு ஆக்சிஜன் உற்பத்தியானது, 3 மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதில், `நாங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துவிட்டோம், ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டாம்' என அரசு கூறியிருக்க வேண்டும். அப்படி எதையும் செய்யவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் மத்திய அரசின் போக்கிலேயேதான் மாநில அரசு சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது. மேகதாது அணை விவகாரத்தில் ஆளும்கட்சியாக இருப்பதால் போராடக் கூடாது என்று எதுவும் இல்லை. அரசாக இருந்து போராடுவதில் என்ன தவறு? `உறவுக்கு கை கொடுப்போம்' எனக் கூறிவிட்டு முழுவதும் உறவாடுவதைத்தான் தி.மு.க செய்து கொண்டிருக்கிறது. உரிமைக்குக் குரல் கொடுக்கும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை" என்கிறார்.
``முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இவை குறித்தெல்லாம் சீமான் வலியுறுத்தினாரா?" என்றோம். ``ஆமாம். அப்போது ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி பேசிய சீமான், `இதில் காங்கிரஸின் நிலைப்பாடுதான் பா.ஜ.கவுக்கும். இவை எதுவும் மாறப் போவதில்லை. கடந்த ஆட்சியில் இல்லாதது இந்த ஆட்சியில் மாற வேண்டும் என்றால் நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது' என்றார். முதலமைச்சரும் தான் உறுதியாக இருப்பதாகக் கூறினார். ஆனால், இது அடிமை ஆட்சியின் நீட்சியாக இருக்கிறது.
எடப்பாடிக்கு பதில் ஸ்டாலின் வந்திருக்கிறார்.ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரைக்கு வருவதற்காக தனி உத்தரவே போடுகிறார்கள். அந்த உத்தரவை நியமித்தவரை மாற்றிவிட்டார்கள். அந்த உத்தரவு என்னவானது? நேற்று மதுரையில் பார்த்தபோது, ஆண், பெண் காவலர்களுக்கு `சிறப்பு வேலை' எனக் குறிப்பிட்டு ரோஸ் நிற அட்டையை பேட்ஜாக குத்தியுள்ளனர். இதனை எப்படி எடுத்துக் கொள்வது?" என்கிறார்.
``சீமானின் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``அந்த அறிக்கை முழுக்க முழுக்க தி.மு.க மீதான வன்மத்தில் புரிதல் இல்லாமல் எழுதப்பட்டதாகவே பார்க்கிறேன். `ஒன்றியம்' என்ற வார்த்தையை வைத்து தி.மு.க ஒப்பேற்றவில்லை. அரசிலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் காரணம், ஒற்றை ஆட்சித் தன்மை என்ற அடிப்படையில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.
ஒன்றியம் என்ற சொல்லாடல் என்பது சினிமா வசனமாக இல்லாமல், கூட்டாட்சித் தத்துவத்தைப் பேசுகின்ற முக்கியமான வார்த்தையாக உள்ளது. ஏனென்றால், மாநில அரசின் பட்டியலில் உள்ளவற்றைக்கூட அந்தந்த அரசுகளைக் கேட்காமல் முடிவெடுக்க முடியும் என்ற நிலையில் பா.ஜ.க இருக்கும்போது, `நீங்கள் ஒன்றியம்தான், இரு தரப்பின் ஒப்புதலோடுதான் எதையும் நிறைவேற்ற வேண்டும்' என்ற வாதத்தை தி.மு.க முன்வைக்கிறது. அதனால்தான் இந்தச் சொல்லை வலிந்து சொல்கிறோம். மேலும், `மம்தா பானர்ஜி போல சண்டை போட வேண்டும்' என்கிறார். மேற்கு வங்க கலாசாரம் என்பது அங்கு இரு கட்சிகளுக்கான பூசலாக வெடித்துள்ளது. இங்குள்ள நிலைமை என்பது வேறு" என்கிறார்.
``மோகன் பாகவத் வருகை, நீட் தேர்வு, ஸ்டெர்லைட் விவகாரம் போன்றவை தொடர்பாகவும் சீமான் பட்டியலிட்டுள்ளாரே?" என்றோம். `` மோகன் பகவத் விவகாரத்தில், உயர் பாதுகாப்பில் உள்ள ஒருவருக்கு சட்டம் ஒழுங்கை மதிக்கின்ற ஓர் அரசு, பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அது ஒரு நடைமுறை. இந்த விவகாரத்தில் உதவி ஆணையரின் அறிக்கை வெளியில் வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி போல, `எங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டது' எனக் கூறவில்லை. அந்த அதிகாரியையும் 2 மணிநேரத்தில் விடுவித்தோம்.
அடுத்ததாக, நீட் தேர்வை சீமான் ஆதரிக்கிறார். `நீட் தேர்வு தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறிவிட்டார்' என்கிறார் சீமான். அப்படியானால் பா.ஜ.க கருத்தை சீமான் ஆதரிக்கிறாரா? நீதிமன்றத்துக்குச் செல்லும்போது உண்மை தகவல்கள் வேண்டும் என்பதால், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நடைமுறைக்கு வந்தபோது, `முடியாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. காரணம், சமூக மேம்பாடு, பொருளியல் சார்ந்த சரியான அளவீடுகளின்படி இடஒதுக்கீடு கொண்டு வந்ததுதான். சமூகத்தில் தாழ்ந்து கிடப்பவர்களை மேலே கொண்டு வருவதற்காகத்தான் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதையொட்டித்தான் நீட் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதேபோல், `ஸ்டெர்லைட் ஆலையை காப்பருக்காக திறக்கக் கூடாது' என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. அம்மக்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மூன்றாவது அலை குறித்து உறுதியான தகவல்கள் வராததால், `அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்' என்ற நிலையில் அரசு உள்ளது. இதுகுறித்து பேசுவதற்கு சீமானுக்கு எந்தவித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார்.
``பா.ஜ.கவோடு தி.மு.க மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறதா?"என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பேசினோம்.
``தி.மு.க அரசு மென்மைப்போக்குடன் நடப்பதாக விமர்சனம் செய்வதில் சரியில்லை. கடந்த காலங்களில் மத்திய அரசை தி.மு.க ஆதரிக்கவும் செய்துள்ளது, எதிர்த்தும் வந்துள்ளது. மத்திய அரசோடு மோதல்போக்கைக் கடைபிடிப்பதை நான் ஆதரிக்கவில்லை.
அதேநேரம், மத்திய அரசிடம் கேட்க வேண்டியதைக் கேட்பதாகத்தான் பார்க்கிறேன். அடுத்ததாக, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இனி வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த விவகாரத்தில் சி.பி.எம் கட்சியும், `ஸ்டெர்லைட் ஆலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், நீட்டிக் கொள்ளக் கூடாது' எனக் கூறியுள்ளனர். இதில், சந்தேகம் தெரிவிப்பது என்பது சரியான ஒன்றாகத் தெரியவில்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``நீட் தேர்வு என்பது ஒரு சிக்கலான பிரச்னை. இதில் மாநில அரசால் திடீரென மாற்றிவிட முடியும் எனத் தோன்றவில்லை. தேர்தலின்போது அவர்கள் பேசியது என்பது உண்மைதான். இதில் மத்திய அரசை மனமாற்றம் செய்வது போன்றவற்றில் மாநில அரசுக்கு அவகாசம் இருக்கிறது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்துப் பார்ப்பார்கள். மம்தா பானர்ஜி போல கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது என்பது ஓர் அரசியல். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் பா.ஜ.க வந்ததால் மோதிப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இங்கு அப்படிப்பட்ட நிலை எதுவும் இல்லை. தி.மு.கவுக்கு நேரடிப் போட்டியாக பா.ஜ.க இல்லை.
மத்திய தர வர்க்கத்தினரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. இதற்கு எதிரான கொள்கை அரசியலை தி.மு.க மேற்கொள்ளாமல் இருந்தால்தான் சிக்கல் வரும். அதற்கேற்க கட்சித் தொண்டர்களை கொள்கைரீதியாக சிந்திக்க வைப்பதுதான் சரியான ஒன்றாக இருக்க முடியும். மோகன் பகவத் விவகாரத்தில் உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்றது என்பது சரியான விஷயம்.
தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதை தவறான ஒன்றாகப் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. சீமான் போன்றவர்கள், முக்கியமான நிலைக்கு வரும் வரையில் இதுபோன்ற பேச்சுக்களை பேசலாம். இந்த விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் மட்டும் தீர்வு கிடைக்கும் என நான் நம்பவில்லை" என்கிறார் சிகாமணி.