தமிழ்நாட்டில் 28,508 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் முதலீடுகள் செய்யப்படவிருப்பதாக தமிழ்நாடு தொழில்துறை தெரிவித்திருக்கிறது. இதில் பல திட்டங்கள் இன்றே துவங்கிவைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் 17,141 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின.
மேலும் 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்களுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டித் துவக்கிவைத்தார். இது தவிர, 7,117 கோடி ரூபாய் மதிப்பிலான 5 தொழிற்திட்டங்களும் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புவோர் ஓரே இடத்தில் எல்லா அனுமதிகளையும் பெறுவதற்கு ஏதுவாக ஒற்றைச் சாளர இணையதளம் ஒன்றும் துவங்கப்பட்டிருக்கிறது.
இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் டிட்கோ செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன்படி, ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் துறை மற்றும் விமானத்துறைக்குத் தேவையான விமானங்கள்,அவற்றின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் வகையில் 'சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்' ஒன்றை அமைக்கவிருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்தானது.
இது தவிர, மின்சார நிலையங்கள், மின்னணு பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தொழிற்பூங்காக்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் ஆகியவற்றைத் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இன்று செய்யப்பட்டன.
எரிவாயு அடைக்கும் நிறுவனமான ஏ.ஜி & பி பிரதம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் இரண்டாவது கட்டம், காற்றாலைகளுக்கு கியர்களை உற்பத்தி செய்யும் சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆன்செல் ஸ்டெரைல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான அடிக்கல் இன்றுநாட்டப்பட்டது.
இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு மாறப்போவதாகக் குறிப்பிட்டார். கொரோனா பாதிப்பு இருந்த காலகட்டத்திலும் தமிழ்நாடு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், தெற்காசியாவிலேயே தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே தங்கள் லட்சியம் எனக் குறிப்பிட்டார்.
"2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம்கோடி அமெரிக்க டாலர்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியாகக் கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் அரசின் குறிக்கோள்" என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில்துவங்கத் திட்டமிட்ட உடனேயே அந்தச் சிந்தனை செயல்பாட்டிற்கு வரும் வகையில் சூழலை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆட்டோமொபைல், ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தி துறைகள் வளர்ந்திருக்கும் நிலையில், மின் வாகன உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென்றும் முதல்வர்குறிப்பிட்டார்.
தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள முதலீடுகள் அனைத்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் என மாநிலம் முழுவதும் பரவலாக அமையுமெனவும்அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திவருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதலாவது முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடந்தப்பட்டது. இதற்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சரானபிறகு ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்.ஆனால், இந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறவில்லையென சமீபத்தில் தி.மு.க. குற்றம்சாட்டியிருந்தது.