சாமியார் நித்யானந்தா கொரோனா 3-ம் அலை தொடர்பாகவும் தனது சத்சங்கத்தில் அவ்வப்போது பேசி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய கால் இந்தியாவில் பட்டால் தான் கொரோனா இந்தியாவை விட்டு போகும் எனவும், கொரோனாவின் 3-வது அலை புரட்டாசி மாதம் தாக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் பேசிய புதிய வீடியோவில் கூறியதாவது:-
இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3-ம் அலையை வரவேற்பது போல உள்ளது.
டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. 3-ம் அலை மோசமானதாக இருக்கும்.
கொரோனா வைரஸ்
கொரோனா, மருத்துவ உள்கட்டமைப்பை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் மருத்துவ துறை மட்டுமல்ல சமூக உள்கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் ‘மல்டி லேயர் குவாரண்டைன்’ வசதி உள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். மற்றவர்களை தொட்டு பேசுகிறார்கள்.
தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு தோற்று போய் உள்ளது. மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறார்கள். லக்சரி கடைகளுக்கு செல்கிறார்கள்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தை பார்த்தால் கொரோனாவே இறந்து விடும் போல் உள்ளது. (இதை கூறும்போது சிரிக்கிறார்)
3-வது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். பாதிப்பும் கடுமையாக இருக்கும். எனவே மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும்.
நான் எனது பக்தர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன். உங்களுக்கு குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை ஆதி கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள்.