எல்லைக்கு மிக அருகே கட்டடம் எழுப்பும் சீனா
16 Jul,2021
வடக்கு சிக்கிம் மற்றும் லடாக் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் சீன ராணுவத்தினர் கான்கிரீட் கட்டடங்களை எழுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு கடும் மோதல் வெடித்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்கள் பலியாகினர். ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே நடந்த பல்வேறு சுற்று பேச்சைத் தொடர்ந்து சில பகுதிகளில் இரு தரப்பு வீரர்களும் திரும்பப் பெறப்பட்டனர். இந்த பிரச்னைக்கு இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லாபகுதிக்கு எதிரே நம் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் கான்கிரீட் கட்டடங்களை சீன ராணுவம் எழுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்த பகுதியில் சாலை வசதிகளையும் அவர்கள் ஏற்படுத்தி இருப்பதால் கட்டடம் அமைந்துள்ள இடத்தில் இருந்து உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியை சீன வீரர்கள் மிக விரைவாக வந்தடைந்து விட முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதே போன்ற கட்டடங்களை கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளிலும் சீன ராணுவத்தினர் கட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடும் குளிர் காலங்களில் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் சீன வீரர்களுக்கு இந்த கட்டடம் பெரும் உதவியாக இருக்கும் என்பதற்காக இந்த கட்டடங்கள் கட்டப்படுவதாக சீனா தரப்பில் கூறப்பட்டு உள்ளது