சென்னையில், வார இறுதி நாட்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவும், மாநகராட்சி சார்பில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதற்காக, சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இதையடுத்து, அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகள், மார்க்கெட்டுகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னை மாநகராட்சி, காவல் துறையுடன் இணைந்து, கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என, இந்த குழு தீவிரமாக கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும்.கைகழுவும் திரவம் கொண்டு அவ்வப்பொழுது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்படுகிறதா என, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு, 'தெர்மல் ஸ்கேனர்' மூலம், உடல் வெப்பம் பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளின் வாயிலில் சானிடைசர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைக்கு நுழையும் முன், சானிடைசர் கொண்டு கைகழுவ வேண்டும். கண்காணிப்பு குழுவின் ஆய்வின் போது, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், தொற்று நோய் சட்டம், 1897பிரிவு, 2 கீழ், சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.