மாஸ்டர் கார்டுகளுக்கு தடை: ரிசர்வ் வங்கி அதிரடி!
15 Jul,2021
வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. விதிமுறைகளின்படி, இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கிய சர்வர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை மாஸ்டர் கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை.
எனவே ரிசர்வ் வங்கி இந்தத் தடையை விதித்திருக்கிறது. அதே நேரத்தில் மாஸ்டர் கார்டு பயன்படுத்தி வரும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது .
மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு போதுமான வாய்ப்புகளும் , கால அவகாசமும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் ஆனால் , அந்த நிறுவனம் விதிமுறையை சரியாக பின்பற்றவில்லை என்பதால் தடை செய்யப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது .
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டின்னர்ஸ் கிளப் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் புதிய கார்டுகளை மே 1 ஆம் தேதி முதல் விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது கவனிக்கத்தக்கது .
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது . அதில் டெபிட் - கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புகளை உள்ளடங்கிய சர்வர் , இந்தியாவில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது .