தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம்: பெரும்பாலானோர் கருத்து!
15 Jul,2021
தமிழ்நாட்டில், 'நீட்' தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதன்படி 9 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களை பெற்றனர். அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் பலகட்டமாக ஆலோசனை மேற்கொண்டு ஆய்வறிக்கையை ஒன்றை தயாரித்தனர். அந்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்த பின் நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது பற்றி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. எங்களது தனிப்பட்ட கருத்துகளை ஆய்வு அறிக்கையில் முன் வைக்கவில்லை.
ஆய்வு திருப்தியாக இருந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்து இருந்தனர். இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.