அமைச்சரவை மாற்றத்தின்போது எல். முருகனின் சுயவிவரக் குறிப்பில் கொங்கு நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது
அண்மையில் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தின்போது புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எல். முருகன், தனது சுயவிவரத்தில் தம்முடைய வசிப்பிடமாக "கொங்கு நாடு" எனக் குறிப்பிட்டிருந்தார். அது தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ச்சியான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டவங்களான கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி ஆகியவையும் திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சில பகுதிகளையும் கொங்கு மண்டலம் என்று கூறுவது சம கால அரசியலில் வழக்கமாக இருந்து வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த மண்டலம் தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்களின் முடிவுகளைப் பிரதிபலிக்கவில்லை. மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மேற்கு மண்டலத்தில் மட்டும் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த மாவட்டங்களில் மொத்தமாக 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 24 தொகுதிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றின. கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட திமுகவுக்கு கிடைக்கவில்லை. மாநிலம் முழுவதும் நான்கு இடங்களில் வென்ற பாரதிய ஜனதாவுக்கு இங்கிருந்து இரண்டு எம்எல்ஏக்கள் கிடைத்தார்கள்.
இப்படியொரு தேர்தல் முடிவு வந்தது முதலே மேற்கு மண்டலத்தை கேலி செய்தும், பெருமையாகவும் அரசியல் ரீதியான மீம்கள் வெளியிடப்பட்ட. ஒரு கட்டத்தில் கோவை சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #gobackstalin என்ற ஹேஷ்டேக் பரவும் அளவுக்கு நிலைமை முற்றியது.
இந்தச் சூழலில்தான் அமைச்சரின் சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்ட கொங்கு நாடு என்ற சொல்லாடல் சர்ச்சையாக வெடித்தது. பலர் அது தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கத் தொடங்கினார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்கு நாடு பற்றிய இலக்கியக் குறிப்புகளை எடுத்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். கொங்கு நாட்டை தனியாகப் பிரிக்கத் திட்டம் இருப்பதாக நாளிதழ் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது. அது சர்ச்சை மேலும் தீவிரமாக்கியது.
கொங்கு நாட்டை தமிழ்நாட்டில் இருந்து பிரிப்பது என்ற கருத்தை திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. பாஜகவின் தோழமைக் கட்சியான அதிமுகவும் கொங்குநாடு பிரிப்பு கோரிக்கையை ஏற்கவில்லை.
"கொங்கு நாடு பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும். சிறு சிறு மாநிலங்களாக இருக்கும் போது நாட்டின் பலம் குறையும். கொங்கு நாடு என்ற கருத்தை யார் முன்வைத்தாலும் தவிர்க்க வேண்டும்" என்று ஒரு பேட்டியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குறிப்பிட்டிருந்தார்.
கொங்கு நாடு தொடர்பான சர்ச்சை தொடர்பாக பேட்டியளித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "கொங்கு நாட்டை தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க நினைத்தால், இந்தியாவையும் இரண்டாகப் பிரிக்குமாறு கோரிக்கை வைப்பேன்" என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று விளக்கம் அளித்தார். தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்றும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே பாஜகவின் லட்சியம் என அவர் கூறினார். தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் கொங்கு நாடு குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதையும் வெளியிடவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
கொங்கு நாடு என்பது என்ன?
வரலாற்றில் கொங்கு நாடு என்ற ஒன்று இருந்ததா, அப்படி இருந்தால் அதை யார் ஆட்சி செய்தார்கள், அந்த நிலப்பரப்பின் முக்கியத்துவம் என்ன, அவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றனவா என்பன போன்ற கேள்விகளோடு தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற கல்வெட்டு ஆய்வாளர் இரா.ஜெகதீசனிடம் பேசினோம்.
"கொங்கு என்பதற்கு பல்வேறு பெயர்க் காரணங்கள் கூறப்படுகின்றன. தேன், மாம்பழம் ஆகியவற்றின் பொருள்படும்படியாக கொண்டு கொங்கு என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவை ஏற்றுக் கொள்ளக்கூடியவையாக இல்லை. ஆதாரங்களும் கிடையாது. என்னுடைய ஆராய்ச்சியின்படி கொங்கு என்றால் கிழக்கு என்று பொருள்படும். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே உள்ள பகுதியை குடகு நாடு என்பார்கள். குடகு என்றால் மேற்கு. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்குப்பகுதியில் வசித்தவர்கள் கொங்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். இன்றும் நீலகிரி மலையில் வசிக்கும் பழங்குடியினர் கிழக்கு திசையைக் குறிப்பிடுவதற்காகப் கொங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். வடகிழக்குப் பருவமழையை கொங்கன் மழை என்கிறார்கள். இந்தச் சொல் சங்க இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது"
"ரோமானியர்களுடன் கொங்குப் பகுதி அதிக வணிகத் தொடர்பு கொண்டதாக இருந்தது. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ரோம நாணயங்களில் 90 சதவிகிதம் அளவுக்கு கொங்கு பகுதிகளில் கிடைத்திருக்கின்றன. கொங்கு பகுதி கரிசல் மண் கொண்ட பூமி என்பதால் பருத்தி, விஜயநகர ஆட்சி நடந்த காலத்தில் பருத்தி விவசாயம் வளர்ச்சியடைந்தது. அதுவே பிற்காலத்தில் நெசவுத் தொழில் வளர்ச்சியடைக் காரணமாக அமைந்தது."
"வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்திலும் கொங்குநாடு என்ற நிலப்பரப்பு தனி நாடாகவோ, தனி ஆட்சிக்குட்ட பகுதியாகவோ, ஒரே அரசரின் கட்டுப்பாட்டிலோ இருந்ததில்லை. இந்தப் பகுதிக்கு தலைநகரம் என்று எதுவும் இருந்திருக்கவில்லை. இப்போது கொங்கு பிராந்தியங்களாகக் கூறப்படும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி போன்றவற்றை கொங்கு பகுதிகள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. தெற்கே பழனி மலை தொடங்கி, வடக்கே சேலம் ஆத்தூர் வரைதான் கொங்குநாடு என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன" என்கிறார் ஜெகதீசன்.
கொங்கு நாடு பிரிப்பு என்பது போகிறபோக்கில் அக்கறையின்றிச் கூறப்பட்டிருக்கும் கருத்து என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் "தி இந்து" குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என் ராம்.
"கொங்கு நாடு பற்றிய கோரிக்கையே அர்த்தமற்றது, இதை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லவே முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் இதுபற்றிய பேச்சுகள் வீண் வேலை. பாரதிய ஜனதா கட்சி இதன் மூலம் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்க்கிறது. தமிழகம் மதச்சார்பற்ற தன்மையில் இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. கொங்கு நாடு பற்றிய பேச்சுகளும் பலன் கொடுக்காது. அதற்கு அரசியல் ரீதியாக எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை. மக்களின் திரளான கோரிக்கைகள் இல்லாமல் மாநிலங்களை பிரித்துவிட முடியாது.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் திமுக அரசு, 'ஒன்றியம்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எதிர்வினையாக கொங்குநாடு பற்றிய பேச்சு அமைந்திருக்கிறது என்ற கருத்தையும் என்.ராம் மறுத்தார்.
"ஒன்றியம் என்பது அரசியல் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய யூனியன் என்பதைத் தமிழாக்கினால் இந்திய ஒன்றியம்தான். அதனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கருதி வேறொன்றைச் செய்வது என்பது பொருளற்றது. குறுக்கு வழியில் மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறாக, மாநில அரசுகளின் அனுமதியின்றி, மாநிலங்களைப் பிரிக்கமுடியும். என்றாலும் தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை" என்றார் என்.ராம்.
இது தொடர்பான சட்ட நடைமுறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம், மத்திய அரசு தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு நினைத்தால் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று புதிய மாநிலங்களை உருவாக்கவும், யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் முடியும். ஆனால் இப்போதைய சூழலில் மத்திய அரசு தமிழகத்தில் அப்படியொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறும் இல்லை" என்றார் வள்ளி நாயகம்.
கொங்கு நாடு கோரிக்கை 1989-ஆம் ஆண்டிலேயே கோவை செழியன் தலைமையில் தனிமாநிலக் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதில் தாம் பங்கேற்றதாகவும் கூறுகிறார் பொங்கலூர் மணிகண்டன். இவர் கொங்கு நாடு மேற்கு தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்.
"கொங்குநாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த அரசியல் பிரமுகர்களை இதற்கு முன் திமுக ஆதரித்திருக்கிறது அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பல மாநாடுகளில் திமுக தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். கொங்கு நாடு பகுதியின் ஆதரவின்றியே ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக முடியும் என்னும்போது, அந்தப் பகுதி குறித்து எப்படி அவருக்கு அக்கறை வரும். அதனால் நிர்வாக வசதிக்காக கொங்கு நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும்" என்றார் பொங்கலூர் மணிகண்டன்.
ஆனால் திமுக மாநில சுற்றுச் சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி இதை ஏற்கவில்லை.
"கொங்கு பிராந்தியத்தில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்றால் அதற்காக தனியாகப் பிரிப்பது என்பது தீர்வாகாது. மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களைக் கொண்டு வரலாம். கூடுதல் நிதியை ஒதுக்கலாம். தேவைப்பட்டால் வளர்ச்சி ஆணையம் ஒன்றை உருவாக்கி பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். ஆனால் கொங்கு நாட்டை தனியாகப் பிரிக்கக் கூடாது. அதுபற்றிய பேச்சு நாட்டின் ஒற்றுமையில் காயத்தை ஏற்படுத்திவிடும்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கார்த்திகேய சிவசேனாதிபதி. இவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர்.
கொங்குநாடு குறித்த தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்தறிவதற்காக பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜனை தொடர்பு கொண்டோம்.
"தற்போது தெரிவிக்க எதுவுமில்லை. மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் பதவியேற்ற பிறகு, அவரே தனது நிலைப்பாட்டை அறிவிப்பார்" என்றார் கரு. நாகராஜன்.