கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
04 Jul,2021
மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு கடந்த 30-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பினர். நேற்று 2-வது முறையாக ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் வழக்கம் போல் கச்சத்தீவு கடலோர பகுதியில் கடலில் மீன்பிடி வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிநவீன பிளாஸ்டிக் படகில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.
அவர்கள் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை, இந்த பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது. உடனடியாக இங்கிருந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.
இலங்கை கடற்படையின் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் படகுகளை மாற்றுப்பகுதிக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து அவசர அவசரமாக படகுகளில் புறப்பட்டு வந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி கடலில் வீசி விட்டனர்.
இதனால் நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என வந்து விட்டோம்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் ஒவ்வொரு மீனவருக்கும் ஏறத்தாழ படகுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மற்ற மீனவர்கள் மத்தியில் தகவல் தெரிந்தவுடன் ராமேசுவரம் பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவு கடலோர பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.