காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடெங்கும் புதிதாக 51 ஆயிரத்து 667 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 34 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 17 லட்சத்து 35 ஆயிரத்து 781 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு விகிதம் 2.98 சதவீதம் ஆகும். பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்குள் பதிவாகி இருப்பது இது தொடர்ந்து 18-வது நாள் ஆகும். இதே போன்று வாராந்திர பாதிப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது.
கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு நேற்று ஆளானவர்களை விட, அதில் இருந்து குணம் அடைந்து வீடுதிரும்பியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது 43-வது நாளாக நடந்துள்ளது. 51 ஆயிரத்து 667 பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், 64 ஆயிரத்து 527 பேர் குணம் அடைந்து வெற்றிகரமாக வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இதுவரையில் நாடு முழுவதும் 2 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 267 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து இருக்கிறார்கள். மீட்பு விகிதம் 96.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நேற்று கேரளாவில் அதிகபட்சம் 11 ஆயிரத்து 469 பேர் குணம் அடைந்தனர். கர்நாடகத்தில் 9,768 பேரும், மராட்டியத்தில் 9,371 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி, நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சற்று அதிகம். நேற்று முன்தினம் 1,321 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்து 1,329 ஆக பதிவானது.
மராட்டியத்தில் 556 பேரும், கர்நாடகத்தில் 138 பேரும், கேரளாவில் 136 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
அந்தமான் நிகோபார், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன் டையு, லடாக், லட்சத்தீவு, ராஜஸ்தான் ஆகியவற்றில் ஒரு உயிர்கூடகொரோனாவால் பறிக்கப்படவில்லை என்பது கவனத்தை கவரும் அம்சமாக அமைகிறது.
கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நாடு முழுவதும் இறங்குமுகத்தில் உள்ளது. நேற்று இந்த எண்ணிக்கையில் 14 ஆயிரத்து 189 குறைந்தது. காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் 6 லட்சத்து 12 ஆயிரத்து 868 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் இது 2.03 சதவீதம் ஆகும்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரையில் 39.95 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.