கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும், 2,587 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா உயிரிழப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் கோவை மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மவுனம் சாதிப்பதும், உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க மறுப்பதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 2019ம் ஆண்டு, கொரோனா அலை எதுவும் இல்லாத நிலையில் மே மாதத்தில் 683 பேர், வேறு நோய்களால்உயிரிழந்துள்ளனர். அடுத்த ஆண்டில் அதாவது, 2020, மே மாதம், கொரோனா முதல் அலையின்போது, 536 பேர் உயிரிழந்தனர்.கடந்த மே மாதத்தில் 2,587 பேர் இறந்துள்ளனர் என, சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்கள், 321 பேர் மட்டுமே என, கணக்கு கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் கூடுதலாக 2,266 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களில் பலரும், 'நெகட்டிவ்' ரிசல்ட், வந்த பிறகும் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகள் 'கொரோனா இறப்பு' கணக்கில் சேர்க்கப்படவில்லை என, கூறப்படுகிறது.
கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மூச்சுதிணறல், சர்க்கரை, மாரடைப்பு, நிமோனியா என, பக்க விளைவு பாதிப்புகளால் உயிரிழந்ததாக இறப்பு சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களின் இறப்பு கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. வயதானோர் மட்டுமின்றி, நடுத்தர வயதினரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் பலியாகியிருக்கும் அபாயம் இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தில் இறப்பு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலோ அதுவும் இல்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன் அதிகாரப்பூர்வ தகவலையும் கூட மக்களுக்கு தெரிவிக்க தயங்குகின்றனர்; பத்திரிகையாளர்கள் கேட்டாலும் தருவதில்லை.
இதுகுறித்த தகவல்களுக்காக, கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமாரை, நமது நிருபர் நேரில் சந்திக்க முயன்றும் முடியவில்லை. அவரது, தொலைபேசி 94430 18643 எண்ணில் பல முறை தொடர்பு கொண்ட பின் பேசினார். ''இந்த தகவல் அனைத்தும் உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் இருக்கும்; அவர் தருவார்,'' என்றார்.சுகாதாரத் துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜின் தொலைபேசி, 98943 38846 எண்ணுக்கு 7 முறை தொடர்பு கொண்டோம்.
கடைசியாக பேசிய அவர், ''நான் வால்பாறைக்கு ஆய்வுக்காக வந்துள்ளேன்; அலுவலகம் வந்ததும் தருகிறேன்,'' என்றார். இரு நாட்கள் கழித்து நேரில் அவரை சந்தித்தபோது, 'இதோ, அதோ' என, ஏதேதோ காரணங்களைக் கூறினாரே தவிர விபரங்களைத் தரவில்லை. கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக பல்வேறு விதமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் முன் வைக்கப்பட்டுவரும் நிலையில், அதிகாரப்பூர்வ விபரங்களைக் கூட தெரிவிக்க தயங்கும் 'பொறுப்பான' அதிகாரிகளால், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவது உறுதி