யோகா தோன்றிய போது இந்தியா என்ற நாடே இல்லை: நேபாள் பிரதமர்
22 Jun,2021
யோகா எனும் உடல்-மனவளக்கலை, பயிற்சி நேபாளத்தில் உருவானதே தவிர இந்தியாவில் உருவானதல்ல என்று நேபாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் இவர் ராமபிரான் இந்தியாவில் பிறந்தவரல்ல நேபாளத்தில் பிறந்தவர் என்றார். உலகில் யோகா தோன்றிய போது இந்தியாவே இல்லை என்றும் கூறுகிறார் ஷர்மா ஒலி.
“யோகா இந்தியாவில் தோன்றியதல்ல, அது நேபாளத்தில் தோன்றியது. யோகா என்ற ஒன்று உலகில் தோன்றிய போது இந்தியாவே இல்லை. அப்போது இந்தியா பிரிந்து கிடந்தது” என்று சர்வதேச யோகா தினத்தில் சர்மா ஒலி கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “இப்போது இந்தியா என்று இருக்கும் நாடு அப்போது இந்தியா என்று அறியப்படவில்லை. பல இனக்குழுக்கள் வாழ்ந்த பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அப்போது கண்டம், துணைக்கண்டமாக இருந்தது.
ஆகவே யோகா நேபாளத்தில் தோன்றியது, அதை உருவாக்கிய ஞானிகளுக்கு உரித்தாக்க வேண்டிய பெருமைகளை நாங்கள் வழங்கி அதை வளர்த்தெடுக்கவில்லை. நாம் எப்போதும் நம் பேராசிரியர்களின் பங்களிப்புகளை பேசி வந்திருக்கிறோம்” என்றார் ஒலி.
2015 முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நேபாள் பிரதமர் சர்மா ஒலி, ராமர் இந்தியாவில் பிறந்தவரல்ல, நேபாளத்தில் பிறந்தவர் என்றும் உண்மையான அயோத்தி தோரியில் உள்ளது என்றும் போலி அயோத்தியை உருவாக்கி இந்தியா தங்கள் நாட்டு பண்பாட்டு மீது மேலாதிக்கம் செய்யப் பார்க்கிறது என்றும் சர்மா ஒலி காட்டமாகத் தெரிவித்ததும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது.