"ஏழு பேரின் விடுதலை குறித்த தீர்மானத்தை ஏற்க முடியாது": திமுக-விற்கு செக் வைத்த காங்கிரஸ்!
22 Jun,2021
ஏழு பேர் விடுதலை தொடர்பாக திமுக தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் குடியரசு தலைவர் அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஏழு பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொண்டாலும் கூட தமிழக காங்கிரஸ் கட்சினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விரிசல் ஏற்படும் விதமாக கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.