கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் கன்றுக்குட்டியின் ரத்தம் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக இந்தியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்தியாவில் சிலர் பசுக்களை புனிதமாக பார்க்கும் சூழல் நிலவுவதால் இந்த செய்தி சர்ச்சையாகிறது.
சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் (இந்தியாவில் உருவாக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுவது) தடுப்பூசியில் இளங்கன்றின் உடலில் இருக்கும் நீர்த்தப் பகுதி (serum) சேர்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்தது.
கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டவர் விகாஸ் பட்னி. அவர் தனது யூ டியூப் வீடியோவில், எந்த ஆதாரமும் இன்றி, இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்ட், ஃபைசர் உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளிலும், இளங்கன்றின் சீரம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பரவலாக பகிரப்பட்டது. பின்னர் விதிமுறைகளை மீறயதாக இந்தக் காணொளியை யூ டியூப் நீக்கியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பதிலை ட்வீட் செய்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர் கௌரவ் பந்தி, இளங்கன்றுகளை வெட்டி, அவற்றின் சீரம் எடுப்பது, "கொடூரமான செயல்" என்று பதிவிட்டிருந்தார்.
எனினும், "இறுதியாக மக்களுக்கு போடப்படும் தடுப்பூசியில் இளங்கன்றின் சீரம் இல்லை" என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பு மருந்தில் கன்றுகுட்டியின் சீரம் உள்ளது என்ற தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு தகவல்.
வெரோ செல்களின் உற்பத்திக்கு மட்டுமே கன்று குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுகிறது. வெரோ செல்களின் வளர்ச்சிக்கு கன்றுகுட்டிகள் மற்றும் பிற விலங்குகளின் சீரம்கள் பயன்படுத்தப்படும். இந்த வெரோ செல்கள் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த முறைதான் போலியோ, ரேபிஸ் தடுப்பு மருந்துகளிலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வெரோ செல்கள் வளர்ச்சியடைந்த பிறகு பல முறை நீராலும், பிற ரசாயனங்களாலும் கழுவப்படும். பிறகுதான் இந்த வெரோ செல்கள் கொரோனா வைரஸ் புகுத்தப்பட்டு அது வளர்க்கப்படும். வைரஸ் வளர்ச்சியடைந்த பின் வெரோ செல்கள் நீக்கப்படும். இந்த வைரஸ் வளர்ந்த பிறகு அது செயலிழக்கச் செய்யப்படும். அதாவது கொல்லப்படும். இந்த வைரஸ்தான் தடுப்பு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும். எனவே தடுப்பு மருந்தின் இறுதி தயாரிப்பில் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படவில்லை. என மத்திய சுகாதாரத் துறை விளக்கம் வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 26 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 3.1 கோடி பேருக்கு, அதாவது 12 சதவீதம் பேருக்கு கோவேக்சின் செலுத்தப்பட்டுள்ளது.