இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது
13 Jun,2021
தூத்துக்குடியில் இருந்து படகு ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி- தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர், சந்தேகிக்கும் விதமாக சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று நேற்று (வெள்ளிக்கிழமை ) மாலை கிடைத்துள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகபரை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் இந்தியா வாழ் வெளி நாட்டினருக்கான ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்துள்ளதுடன் கோவாவில் இருந்து விமானம் ஊடாக பெங்களுர் வந்துள்ளார்.
அதன்பின்னர் அங்கு வாடகைக்கு கார் ஒன்றினை எடுத்துக்கொண்டு, கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்தடைந்த அவர் பிரபல ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார்.
இதன்போது தூத்துக்குடியில் இருந்து படகு ஊடாக உரிய அனுமதி ஆவணமின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு கடற்கரையில் நின்ற போதே பிடிபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ ‘கேட்டமைன்’ போதை பொருளை பறிமுதல் செய்து இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன் கடந்த 2019 ஆம் ஓகஸ்ட் மாதம் வரை சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
அதன்பின்னர் பிணையில் வெளியில் வந்த அவர், இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது, கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.