இலங்கை கொரோனா நோயாளிகள் ராமேசுவரம் கடல் வழியாக ஊடுருவலா?
11 Jun,2021
ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் இருந்தும் படகுகளில் கடற்படையினரும் கச்சத்தீவு வரையிலான இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் கடல் பகுதி இலங்கைக்கு அருகில் உள்ளது. எனவே இலங்கையில் இருந்து ராமேசுவரம் கடல் வழியாக தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கின்றன.
இது போல் கடல் அட்டை, கஞ்சா, போதை பொருட்கள், மஞ்சள் உள்ளிட்டவை கடத்தல்காரர்கள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதும் நடக்கின்றன. அதே நேரத்தில் இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கடத்தல்களை முறியடிக்கவும், கொரோனா வால் பாதிக்கப்பட்ட நபர்கள் இலங்கையில் இருந்து ராமேசுவரம் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவலை தடுக்கும் வகையிலும் தற்போது கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 2 அதிவேக ரோந்து கப்பல்கள் மற்றும் 3 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் இருந்தும் படகுகளில் கடற்படையினரும் கச்சத்தீவு வரையிலான இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பாக் ஜலசந்தி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மிகவும் தாழ்வாக பறந்தபடி சந்தேகப்படும்படியான படகுகள் நடமாட்டம் உள்ளதா? என ஹெலிகாப்டரில் இருந்தபடி வீரர்கள் கண்காணித்தனர்.