இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு அருகே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் அமைப்பதற்கு வாங்கிய கடன்களை அடைக்க இயலாதக் கையாலாகா இலங்கை அரசு, தனது நாட்டுக்குட்பட்டப்பகுதியை சீனாவிற்கு மொத்தமாய்த் தாரைவார்த்து, அந்நாட்டின் இறையாண்மைக்குட்பட்டப் பகுதியாகவும் அறிவித்துச் சட்டமியற்றியிருக்கிறது.
அப்பகுதிகளில் இனி இலங்கை அரசின் எவ்வித சட்டத்திட்டங்களும், விதிகளும் செல்லாததாகி அது முழுக்க முழுக்க சீன நாட்டின் கட்டுப்பாட்டுக்குட்பட்டப் பகுதிகளுள் ஒன்றாக இருக்குமென்பது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்குப் பெருங்கேட்டை விளைவிக்கக்கூடியப் பேராபத்தாகும்.
இது நட்பு நாடென நம்பி உறவு கொண்டாடிய இந்தியாவுக்கு வஞ்சக இலங்கை அரசு செய்திருக்கும் பச்சைத்துரோகமாகும். வடகிழக்கில் எல்லையை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வரும் சீனா, தெற்கே கன்னியாகுமரியிலிருந்து 290 கி.மீ. தொலைவில் தன் நாட்டு இறையாண்மையுடன் இலங்கையில் நிலைகொள்ளுவது இந்தியாவின் பூகோள நலன்களுக்கு மிகப்பெரும் ஊறு விளைவிக்கும் கொடுந்தீங்காகும்.
இவ்வாறு இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கி, சீனா தனது அதிகாரப்பரவலை வேர்ப்பரப்பி வருவதும், இந்திய எல்லைக்கருகே நிலையெடுப்பதும் இந்தியாவின் இறையாண்மைக்குப் பேராபத்தாய் முடியும். இந்திய ஒன்றியத்தின் பூகோள எல்லைப்பகுதிகளில் இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் இந்நிலையில்கூட பிரதமர் மோடி கனத்த மௌனம் சாதிப்பதும், சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவதும் வெட்கக்கேடானது.
ஆகவே, இந்திய அரசானது இனியாவது விழிப்புற்று சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டிக்கவும், தடுக்கவும் முற்பட வேண்டுமெனவும், நட்பு நாடென இலங்கையுடன் உறவுகொண்டாடும் கயமைத்தனத்தைக் கைவிட்டு, அந்நாட்டுடனான அத்தனை உறவுகளையும் துண்டிக்க வேண்டுமெனவும் இந்திய ஒன்றிய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.