இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்!
08 Jun,2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்து வருகிறது. முன்னதாக, வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போது பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிகளை செய்து வந்தன. ஆக்சிஜன், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு 3 ஆக்சிஜன் டேக்ங்கர்கள் மூலம் 20 டன் ஆக்சிஜனை சிங்கப்பூர் வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து 20 டன் ஆக்சிஜனுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்தது. இந்த ஆக்சிஜன் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.