ஜீன்ஸ், டி-சர்ட், தாடிக்கு அனுமதி இல்லை- சிபிஐ அதிகாரிகளுக்கு உடை கட்டுப்பாடு
06 Jun,2021
பெண் அதிகாரிகளும் அலுவலகர்களும் சேலை, கோட்-சூட் அல்லது முறைப்படி சட்டை, பேண்ட் அணிந்திருக்க வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட், விளையாட்டு சூ, செருப்பு போன்றவை அணிந்து அலுவலகத்துக்கு வரக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் தங்களது பணி நேரத்தில் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தாடி வளர்க்க கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பு எனப்படும் சிபிஐ நாட்டின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிபிஐ அமைப்பின் 33வது இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றார். இதை தொடர்ந்து சிபிஐயில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “ ஆண் அதிகாரிகளும் அலுவலா்களும் பணி நேரத்தில் முறைப்படி காலர் வைத்த சட்டை, பேண்ட், காலணிகள் அணிந்திருக்க வேண்டும். மேலும் தாடி வளர்க்கக் கூடாது, தாடியை முழுதாக மழித்திருக்க வேண்டும்.
இதேபோல், பெண் அதிகாரிகளும் அலுவலகர்களும் சேலை, கோட்-சூட் அல்லது முறைப்படி சட்டை, பேண்ட் அணிந்திருக்க வேண்டும். இரு பாலரும் ஜீன்ஸ், டி-சர்ட், விளையாட்டு சூ, செருப்பு போன்றவை அணிந்து அலுவலகத்துக்கு வரக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் இதனை அதிகாரிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் பணிக்கு கண்ணியமான உடை அணிந்து வரவேண்டும் என்பது ஏற்கனவே அமலில் உள்ளதுதான் என்றும் அண்மை காலமாக சிபிஐ அதிகாரிகள் சிலர் ஜீன்ஸ், டீ-சர்ட் போன்ற அலுவலகம் சாராத உடைகளை அணிந்து பணிக்கு வருவதால் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.