ஆக்சிஜன் செறிவூட்டிக்கு வரி; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
02 Jun,2021
'தனிநபர் வாங்கும் ஆக்சிஜன் செறிவூட்டிக்கு வரி விதிப்பது சட்ட விரோதம்' என, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. சேவை வரிபல நாடுகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அனுப்பி வருகின்றன. தனிநபர்களும் வெளிநாடுகளில் இருந்து செறிவூட்டிகளை வாங்கி கொள்கின்றனர்.
இவ்வாறு தனிநபர் பயனுக்காக வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் செறிவூட்டிகளுக்கு, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.இது தொடர்பான வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 'தனிநபர் பயன்பாட்டுக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் செறிவூட்டிக்கு வரி விதிக்கப்படுவது சட்ட விரோதம்' என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
ஒத்தி வைப்பு : இதை எதிர்த்து, மத்திய நிதி அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் நேற்று ஆஜரான, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டதாவது: இந்த செறிவூட்டிகளுக்கு ஏற்கனவே 77 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அதை 28 ஆகவும், பிறகு 12 சதவீதமாகவும் குறைத்துள்ளோம்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கான வரியை ரத்து செய்வது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில், வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, கவுன்சிலின் கையை கட்டிப் போட்டுள்ளது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.அதை ஏற்ற நீதிபதிகள், டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த தடை விதித்தனர். வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.