வீடு சென்ற தாய்க்கும், மகளுக்கும் பேரதிர்ச்சி; கற்பழித்த
01 Jun,2021
மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தாய்க்கும், மகளுக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட நிலையில் மகளுடன் நடந்தே வீடு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடியின பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் ஆங்காங்கே அரங்கேறி வரும் பாலியல் குற்றங்கள் மனிதத்தன்மை அற்ற நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.
அசாம் மாநிலம் சரைதியோ மாவட்டமானது தேயிலை தோட்டங்கள் அடங்கிய பகுதியாகும். அது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் விளங்குகிறது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவருக்கும், அவருடைய மகளுக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து கடந்த மே 27ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அசாமில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் 25 கிமீ தொலைவில் இருக்கும் தங்கள் வீட்டுக்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் அளிக்குமாறு அப்பெண் கேட்டுள்ளார். இருப்பினும் ஆம்புலன்ஸ் தரமுடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அன்று மதியம் 2.30 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து தங்களின் வீட்டுக்கு நடந்தே செல்வதென முடிவெடுத்து இருவரும் நடக்கத் தொடங்கினர்.
அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது வழியில், அவர்களை இடைமறித்த இருவர் அவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். அவர்கள் இருவரையும் துரத்திச் சென்ற இருவரும் தாயை பிடித்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு கடத்திச் சென்று அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அங்கிருந்து தப்பிய மகள் நடந்தவற்றை கிராமத்தினரிடம் கூறி உதவிக்கு அழைத்து, பின்னர் 2 மணி நேரம் கழித்து தனது தாயை கண்டுபிடித்ததாக கூறுகிறார் அவருடைய மகள்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்த சம்பவம் குறித்து மகள் கூறுகையில், எனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நாங்கள் ஒருவாரத்திற்கு தனிமையில் வைக்கப்பட்டிருந்தோம். என்னுடைய தந்தை, தாய் இருவரின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம். பின்னர் எனக்கும், அம்மாவுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ஆனதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோம். வீட்டுக்கு திரும்புவதற்காக ஆம்புலன்ஸ் கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதால் நாங்கள் 25 கிமீ நடந்தே வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருவர் எங்களை வழிமறித்து தகாத முறையில் நடந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்த போது என் தாய் அவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டார். நான் மட்டும் அங்கிருந்து தப்பி கிராமத்திற்கு வந்த நடந்தவற்றை கிராமத்தினரிடம் தெரிவித்து உதவிக்கு அழைத்தேன் என கூறினார்.
மருத்துவமனையின் அலட்சியம் தான் இந்த சம்பவம் நடைபெற காரணமாக இருந்துள்ளது. ஆம்புலன்ஸ் மட்டும் கொடுத்திருந்தால் அவர்கள் இருவரும் 25 கிமீ நடந்து வந்திருக்க தேவை இருந்திருக்காது. மாலை நேர இருட்டை பயன்படுத்தி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையோரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பழங்குடியினர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர்.