உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை; நாக்பூர் விஞ்ஞானிகள்
29 May,2021
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்று ஏற்பட்டதை கண்டறியும் பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான, புதுமையான கோவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் எளிதான மற்றும் விரைவான முறையை கண்டறிந்துள்ளனர்.
இந்த முறையில் 3 மணி நேரத்தில் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.
இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர் கூறியதாவது: சளி பரிசோதனை முறைக்கு நேரம் ஆகிறது. மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியுள்ளதால், இது நோயாளிகளுக்கு சற்று அசவுகரியமாகவும் உள்ளது. மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.