சென்னையை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா தொற்று பரவலில் கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. `மக்கள் அடர்த்தியும் போதிய விழிப்புணர்வு இல்லாததும்தான் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். என்ன நடக்கிறது கோவையில்?
தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் சில மாவட்டங்களில் குறைந்தும் சில மாவட்டங்களில் அதிகரித்தும் காணப்படுகிறது. காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதேநேரம், சென்னையை விடவும் கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மேற்கு மாவட்டங்களில் பரவலின் விகிதம் அதிகமாவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மாநிலத்தில் உள்ள 267 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று 1.72 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் கோவையில் 4,268 பேரும் சென்னையில் 3,561 பேரும் செங்கல்பட்டில் 1,302 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 33,764 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக தொற்று பரவலில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது கோவை மாவட்டம் முதலிடத்தில் இருப்பது, சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கோவையில் தினசரி தொற்று பாதிப்பு நான்காயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அங்கு அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றைத் தவிர்த்து 19 தனியார் ஆய்வகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முடிவுகள் வருவதற்கு ஏற்படும் காலதாமதத்தால் நோய்த் தொற்று பரவல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியிலும், "கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தப் பகுதிகளில் தொற்று பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது," என்றார். இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளனர்.
``கொரோனா முதல் அலையின்போது, `லேசான அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை' என்றனர்.
பரிசோதனை அறிக்கை, சி.டி ஸ்கேன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை தேவையா என்பதை முடிவு செய்தனர். அதேநேரம், லேசான அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது என்பது அனைத்து தரப்பினருக்கும் அவ்வளவு எளிதானது அல்ல. அது சாத்தியமும் இல்லை. ஒற்றை படுக்கை அறை வசதியுள்ள வீடுகளில் இது மிகவும் சிரமம். பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகிறவர்களையும் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைப்பது மிகவும் சிரமம். இதன் காரணமாகவே தொற்று பரவல் அதிகரித்தது" என்கிறார் கோவை ஈஸ்வரன். இவர் ம.தி.மு.கவின் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கிறார்.
தொடர்ந்து சில தகவல்களை பிபிசி தமிழிடம் அவர் பட்டியலிட்டார். `` வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் சமுதாயக் கூடங்களில் தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். இப்போதுதான் அதைச் செய்து வருகிறார்கள். இதன்மூலம் வீட்டில் உள்ளவர்களுக்குப் பரவுவதற்கு வாய்ப்பில்லை. அடுத்ததாக, மருத்துவமனைகளில் படுக்கைகளை மட்டும் அதிகரிப்பதால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை. அதற்கேற்ப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இன்னும் 10,000 படுக்கைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது அரசின் கைகளில் உள்ளது. அதுவே தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அரசால் சமாளிக்க முடிவதில்லை," என்கிறார்.
மேலும், `` மருத்துவமனைகளில் செவிலியர்கள் குறைவாக இருப்பதால், நோயாளிக்கு உதவியாளர் என்று ஒருவரை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். இவர்கள் வெளியில் சென்று வரும்போது நோய்ப் பரவல் அதிகரிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய வேண்டும். சில இடங்களில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதையும் மூட உத்தரவிட வேண்டும். ஊரடங்கையும் கடுமையாக்க வேண்டும். கொரோனா நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுப் போக்குவரத்து வசதியை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும். இவர்கள் சிகிச்சைக்காக வாகனங்களில் சென்று வருவதால் பரவல் அதிகரிக்கிறது. சிகிச்சையை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் பரவல் அதிகரித்தால் எதையும் செய்ய முடியாது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், கோவிட் மையங்களில் உள்ளவர்கள், மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் எனத் தனியாகப் பிரித்து வகைப்படுத்த வேண்டும்.
அதே போல், காய்கறி வாகனங்கள் வந்தால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்டம் இருந்தால் தள்ளி நிற்கக் கூடிய மனநிலைக்கு மக்கள் வர வேண்டும். கொரோனா குறித்த கவலையே இல்லாமல் பலரும் கூடுவதைப் பார்க்க முடிகிறது. அனைத்து இடங்களையும் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே தொற்று பரவலைக் குறைக்க முடியும்," என்கிறார்.
``கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது, கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை கட்டாயமாக மருத்துவமனையிலும் சிகிச்சை மையங்களிலும் அனுமதித்து மாவட்ட நிர்வாகம் சிகிச்சை வழங்கியது. அதனால், நோய் பரவலும் கட்டுக்குள் இருந்தது. ஆனால், இம்முறை அவ்வாறு செய்யத் தவறியதும் கோவையில் பாதிப்பு அதிகரிக்கக் காரணம்," என்கிறார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சரவணன்.
தொடர்ந்து பேசியவர், ``நோயாளிகளை சிகிச்சை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் அனுமதித்து, வெளியில் வராதவாறு அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்க வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம் மிகவும் தாமதமாகவே சிகிச்சை மையங்களை கூடுதலாக உருவாக்க முயற்சிகள் எடுத்தது. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையங்களில் படுக்கைகள் நிரம்பியபோதே அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு கூடுதல் சிகிச்சை மையங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை உருவாகி இருக்காது.
இவை மட்டுமின்றி பொது முடக்க விதிமுறைகளை முன்கூட்டியே அமல்படுத்தி இருந்தால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய்ப் பரவலையும் குறைத்திருக்க முடியும். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நடைமுறைகளையும் கோவை மாவட்ட மக்கள் தீவிரமாக கடைப்பிடிப்பதாக எனக்கு தெரியவில்லை. ஊரடங்குக்கு முந்தைய நாளில் கடை வீதிகளிலும், நகை மற்றும் ஜவுளிக் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் பெருக்கெடுத்தது. தற்போதுள்ள சூழ்நிலையை உணர்ந்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்," என்கிறார்.
மேலும், ``கோவை மாவட்டத்தில் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற அளவிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதோடு, அனுபவமிக்க புதிய அதிகாரிகளை பணியமர்த்தி, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்," என்கிறார்.
அதேநேரம், `கோவையில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு தடுப்பூசி வழங்கவில்லை' எனவும் கூறப்படுகிறது. தற்போது வரையில் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். `நாற்பது லட்சத்துக்கும் மேலாக மக்கள் தொகை உள்ள மாவட்டத்துக்கு இன்னும் கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்ற குரல்களும் எழுந்துள்ளன.
காரணம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புகிறவர்களைவிடவும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று 4,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 2,528 பேர் மட்டுமே வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 25 ஆம் தேதி 3,944 பேருக்கு தொற்று உறுதியானது. ஆனால், 2,454 பேர் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, `தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்' என்ற குரல்களும் எழுந்துள்ளன.அரசு என்ன செய்ய வேண்டும்?
``மளிகைக்கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட வேண்டும். ஊரடங்கையும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்" என்கிறார் தமிழக பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், ``கோவை மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கிறேன். கொரோனா தொற்று பல மட்டங்களில் வேகமாக பரவிவிட்டது. அதேநேரம், சென்னையில் குறையத் தொடங்கிவிட்டது. தொற்று காரணமாக மக்களும் மருத்துவமனைக்குச் செல்வது என அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஊரடங்கை கடுமையாக்குவதும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்," என்கிறார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் குறைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிவதற்காக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமாரை தொடர்பு கொண்டோம்.
அவரிடம் இருந்து பதில் வராததால் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் நிர்மலாவை தொடர்பு கொண்டோம். அவரும் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) பொன்முடிவேலனிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, ``இதுதொடர்பாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்," என்றார்.