இந்தியாவில் தோன்றிய வைரஸ் உலக சுகாதார நிறுவனம் தகவல்
27 May,2021
இந்தியாவில் தான் முதன் முதலாக, 'பி.1.6.17' வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா வைரஸ் முதல் முதலாக தோன்றி, உலகெங்கும் பரவியது. இதையடுத்து, 2020 துவக்கத்தில், பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து இந்தி யாவில், 'பி.1.6.17' வகை வைரஸ் பரவியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 25ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், உலகளவில் கொரோனா பாதிப்பு, 14 சதவீதம் குறைந்துள்ளது. புதிதாக 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 84 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரசின், 'பி.1.6.17' வகை, முதன் முதலாக இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப் பட்டது. இது தற்போது, 53 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரசின் உருவாக்கமான, பி.1.6.17.1 மற்றும் பி.1.6.17.2 வகைகள், முறையே, 41 மற்றும் 54 நாடுகளில் காணப்படுகிறது. பி.1.6.17.3 வகை, ஆறு நாடுகளில் பரவிஉள்ளது. இந்தியாவில் காணப்படும் வைரஸ், பலவகையாக உருமாற்றம் அடைவது கவலை அளிக்கிறது. வேகமாக பரவி தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கு மீண்டும் நோய் தாக்குகிறதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, 23 சதவீதம் குறைந்துள்ளது; புதிதாக 1.84 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் பாதிப்பு, 41 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு, 20 சதவீதம் குறைந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியாவில் மிக அதிகமாக, 28 ஆயிரத்து 982 பேர் இறந்துள்ளனர். அதாவது, லட்சத்தில் இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.