கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
25 May,2021
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரும் மனு தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இறப்பு சான்றிதழ் : கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கருணை கொடையாக, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்குவதில், ஒரே விதமான கொள்கையை பின்பற்ற கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களும், நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணமாக, நுரையீரல் தொற்று அல்லது மாரடைப்பு என்றே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. அதில், கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுவதில்லை.பதில் மனுஎதிர்காலத்தில் அரசு வழங்கும் இழப்பீடுகளை பெறுவதற்கு, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும்.
எனவே, கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில், ஒரே விதமான கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.இது தொடர்பாக, அடுத்த மாதம் 11ம் தேதி, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், 4 லட்சம் ரூபாய் கருணை கொடையாக வழங்க கோரும் மனு மீதும், மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.