மூழ்கிய படகு கண்டுபிடிப்பு மேலும் 16 உடல்கள் மீட்பு
25 May,2021
மும்பை கடல் பகுதியில் மிதவை கப்பலுடன் சேர்ந்து மூழ்கிய இழுவை படகை, கடற்படையினர் நேற்று கண்டுபிடித்தனர். மேலும், 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கை, 86 ஆக உயர்ந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே கடலுக்குள், 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், எண்ணெய் கிணறு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். 'டாக்டே' புயல் வீசியபோது, தொழிலாளர்கள் இருந்த, 'பி - 305' என்ற மிதவை கப்பலும், இழுவை படகும் கடலில் முழ்கின. மிதவை கப்பலில், 261 பேரும், இழுவை படகில், 13 பேரும் இருந்தனர். மிதவை கப்பலில் இருந்து, 186 பேரும், இழுவை படகில் இருந்து இரண்டு பேரும் மீட்கப்பட்டனர். நேற்று முன்தின நிலவரப்படி, 70 உடல்கள் மீட்கப்பட்டன.
காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இழுவை படகை தேடும் பணியில் கடற்படையின் ஐ.என்.எஸ்., மகர் மீட்பு படகு ஈடுபடுத்தப்பட்டது. இந்த படகு, கடலில் மூழ்கிய இழுவை படகை நேற்று கண்டுபிடித்தது. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்ட கடல் பகுதியில் எட்டு உடல்களும், குஜராத்தின் வல்சத் மாவட்ட கடல் பகுதியில் எட்டு உடல்களும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. இதன் வாயிலாக பலியானோர் எண்ணிக்கை, 86 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கண்டெடுக்கப்பட்ட, 16 உடல்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.