கறுப்புப்பூஞ்சை நோய்ப்பரவல் குறித்த செய்தியானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மாநிலங்கள் திணறி வரும் வேளையில் தற்போது பரவி வரும் கறுப்புப்பூஞ்சை நோய்ப்பரவல் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 22 நிலவரப்படி, இந்தியா முழுவதும் சுமார் 8,848 பேர் கறுப்புப்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் அதிகபட்சமாக 2,281 கறுப்புப்பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளன, அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (2,000), ஆந்திரா (910), மத்தியப் பிரதேசம் (720) ராஜஸ்தான் (700), கர்நாடகா (5,00), ஹரியானா (250), டெல்லி (197), பஞ்சாப் ( 95), சத்தீஸ்கர் (87), பீகார் (56), தமிழ்நாடு (40), கேரளா (36), ஜார்க்கண்ட் (27), ஒடிசா (15), கோவா (12), சண்டிகர் (8).
இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் புதிய உச்சத்தை எட்டி நாட்டிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநிலமாக தமிழகம் மாறி நிற்கிற வேளையில் தற்போது பரவி வரும் கறுப்புப்பூஞ்சை நோய்ப்பரவல் குறித்த செய்தியானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கறுப்புப்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி பிரிவுகளை அமைக்கவும், அரசு காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைப்பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.