.
தமிழகத்தில் நேற்று 35,873 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35,483 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்பட்டிருந்த நிலையில் நாளை முதல் தளர்வுகள் இல்லாத தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.
ஊரடங்கிற்குள் சென்று இரண்டு வாரங்களை தொட்டுவிட்ட நிலையிலும் கூட கொரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதுடன் உயிர்பலிகளும் அதிகரித்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருப்பதால் மருத்துவமனைகளும் நிரம்பி, சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் மேலும் 35,483 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,42,344 ஆக அதிகரித்துள்ளது.
அதே போல கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 422 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 20,468 ஆக அதிகரித்துள்ளது. இன்று பலியானவர்களில் 182 மரணங்கள் தனியார் மருத்துவமனைகளிலும், 240 மரணங்கள் அரசு மருத்துவமனைகளிலும் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 25,196 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இது வரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,27,733 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,94,143 ஆக உள்ளது. இன்று மட்டும் 1,76,824 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 5169 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதே போல கோவையில் 3944 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1982 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 81 பேரும், வேலூரில் 31 பேரும், செங்கல்பட்டில் 29 பேரும், திருவள்ளூரில் 27 பேரும், கோவையில் 21 பேரும், தஞ்சையில் 20 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.