6 வார கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் ஆபத்து: நிபுணர்கள் தகவல்
22 May,2021
நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.
பீகாரில் 117 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்ட சூழலில், இந்த நோயை பீகார் பேரிடர் மற்றும் பெருந்தொற்று சட்டத்தின் கீழ் ஒரு தொற்று நோயாக பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் சரத் சந்திரா கூறும்பொழுது, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, டாசிலிஜுமப் மருந்துடன் ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வருதல், வென்டிலேசனில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆக்சிஜனை துணைநிலையாக எடுத்து வருபவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட கூடும்.
இந்த காரணிகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 6 வாரத்திற்குள் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட கூடிய ஆபத்து அதிக அளவில் உள்ளது என கூறியுள்ளார்.
சிலிண்டரில் இருந்து குளிர்ச்சியான ஆக்சிஜனை நேரடியாக கொடுப்பதும் ஆபத்து நிறைந்தது. அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த, பூஞ்சை ஒழிப்புக்கான போசாகோனாஜோல் என்ற மருந்து கொடுக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.