முப்பது ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான், முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதுாரில் கொல்லப்பட்டார். பல ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின், கொலையில் ஈடுபட்ட ஏழு பேருக்கு துாக்கு தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின், அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, ஏழு பேரும் தண்டனை காலத்தில் இருக்கின்றனர்.வேலுார் மத்திய சிறையில் உள்ள ஏழு பேரையும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி, அது ஜனாதிபதி வரை சென்று, மீண்டும் கவர்னரிடமே வந்திருக்கிறது.
கவர்னர் முடிவு எடுக்காத சூழலில், கவர்னரை, சில கட்சிகள் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகின்றன.புதிதாக அமைந்திருக்கும் தி.மு.க., அரசையும், நிர்ப்பந்திக்கத் துவங்கி இருக்கின்றன.ஏழு பேர் விடுதலை தொடர்பாக, கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியிலும், முதல்வர் ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சர் ரகுபதியை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதனால், தமிழக அரசுக்கு கடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில், ''புதிய தமிழக அரசு, எங்கள் தலைவர் ராஜிவை கொன்ற ஏழு பேர் விஷயத்தில், தவறான முடிவெடுத்துவிடக் கூடாது,'' என, தமிழ்நாடு காங்., தரப்பில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
விடுவிக்கக் கூடாது
இது தொடர்பாக, காங்., செய்தி தொடர்பாளர் கே.சந்திரசேகரன் அளித்த பேட்டி:இது, தமிழர்களுக்கான மிகப்பெரிய அவமானம். உலக அளவில், இந்தியாவையே தலைகுனிய வைத்த சம்பவம். இதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொண்டு, எல்லா பிரச்னைகளையும் போல அணுக முடியாது.பல கட்ட விசாரணைகளுக்கு பின், உச்ச நீதிமன்றம், கொலையாளிகள்ஏழு பேருக்கும் மரண தண்டனை வழங்கியது. இதை, அரசியல் ரீதியாக பார்க்கவும் முடியாது; அணுகவும் கூடாது என்பது தான், காங்கிரஸ் நிலைப்பாடு. அதனால் தான், குற்றவாளிகள் ஏழு பேரையும், தண்டனை காலத்துக்கு முன், எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாது என, தெளிவாக சொல்கிறோம். ஏழு பேர் விடுதலை என்று, யார் குரல் கொடுத்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு சொன்ன பின், சட்ட நடைமுறைகளின் படிதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதாபிமானம் என்று சொல்லி, நடந்த கொலையை மறைத்து, கொலையாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளக் கூடாது.
18 பேர் கொலை
அப்படி நடந்து கொள்வது தான்மனிதாபிமானம் என்றால், அதை காங்., தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கொலையாளிகள் ஏழு பேரையும், தமிழர்கள் என்று சொல்வதையே, நாங்கள் எதிர்க்கிறோம். கொலையாளிகளை, ஒரு இனத்துக்குள் கொண்டு வந்து, இனத்தோடு அடையாளப்படுத்தி, இரக்கம் தேட நினைப்பது தவறு.ராஜிவ் கொலையில், அவரையும் சேர்த்து, ௧௮ பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதில், ௧௪ பேர் தமிழர்கள். அவர்களை கொலை செய்தவர்கள், ஏழு தமிழர்கள் தானே? தமிழர்களை கொன்றவர்களை, நாம் ஏன் மன்னிக்க வேண்டும்?இதே மாதிரியான பாதிப்பு, பல அப்பாவிகள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கொலை செய்தவர்கள், சிறையில் இருக்கின்றனர். அது தண்டனை. ஆனால், கொலையாளிகளில் ஒருவரான நளினியின் குழந்தை, சொகுசாக லண்டனில்வளர்ந்து, இன்று மருத்துவராகி இருக்கிறார்.ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, கொலையாளிகள் குடும்பத்தினரை விட, ராஜிவ் கொலையின் போது கூடவே இறந்து போனவர்களின் குடும்பங்கள், பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றன.
மரண தண்டனை
ஒருபோதும் கொலையாளிகளுக்கு ஆதரவாக, கவர்னர் முடிவெடுக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே, காங்., ஆட்சியின் போது எடுக்கப்பட்ட தவறான முடிவு தான், இன்றளவிலும், இந்த பிரச்னை நீண்டு கொண்டே போவதற்கு காரணமாக அமைந்து விட்டது. கருணை மனு மீது, ஜனாதிபதி விரைந்து முடிவெடுத்து, அந்த மனுவை, அப்போதே தள்ளுபடி செய்திருந்தால், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்.அதைச் செய்யாததால், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, இன்று அதிலிருந்தும் தங்களை விடுவிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்.ஏழு பேர் விடுதலையில், தி.மு.க., முனைப்பாக இருப்பது, எங்களுக்கு தெரியும். அதை எதிர்ப்பதில், நாங்களும் முனைப்புடன் தான் இருந்து வருகிறோம்.அதனால், இந்த விஷயத்தில், இரு கட்சிகளும் நேர் எதிர் துருவங்களில் பயணிப்பது ஒன்றும் புதிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
ஏழு பேரை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இக்கடிதத்தை, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் அளித்தார்.கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி, தமிழக அமைச்சரவை, 2018 செப்., 9ல் தீர்மானம் நிறைவேற்றியது.
அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. கவர்னரோ, 'அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு தான் இருக்கிறது' எனக்கூறி, தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.ஏழு பேரும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, சிறைகளில் கூட்ட நெரிசலை நீக்க, கைதிகளை விடுதலை செய்ய, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.எனவே, ஏழு பேரையும் விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக ஏற்று, ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- நமது நிருபர் -