கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அமைப்பு யோசனை
20 May,2021
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளை, வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால், 2.80 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந் நிலையில், அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. எனினும், அடுத்த 8 - 12 மாதங்கள் வரை, 100 கோடி பேர், தடுப்பூசியின்றி இருப்பர். இத்தகைய சூழலில் உருமாறிய கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பாதிக்கப்பட்டோரை கண்டறிவதும், கொரோனா பரிசோதனைகளை விரைவுபடுத்துவதும் மிக முக்கியம். அத்துடன் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதும் அவசியம்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஐந்து அம்சங்கள் அடிப்படையில், சீரிய முறையில் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.கொரோனா பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்டோரை அடையாளும் காணும் பணிகளை முடுக்கி விட வேண்டும். தேநீர் கடைகளைப் போல, கொரோனா பரிசோதனை வசதிகள் ஆங்காங்கே கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
பகுதி வாரியாக, ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டு, நோய் எதிர்ப்பு திறன் குறித்த புள்ளிவிபரங்களை சேகரித்து, ஆய்வு செய்ய வேண்டும்.கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி, புதிய பரிசோதனை தொழில்நுட்பங்களின் திறனை ஆய்வு செய்து, நடைமுறைப் படுத்தலாம்.
கொரோனா பரிசோதனை அனைத்து மக்களும் பெற வழிவகை செய்ய வேண்டும். கொரோனாவின் பல்வேறு மரபணுக்களை ஆய்வு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த, அதற்கு தேவையான சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய, மத்திய அரசு ஒரு பொதுவான அமைப்பை ஏற்படுத்தி, மாநிலங்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால், பரிசோதனை செலவும், கட்டணமும் குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.